அதிமுக உறுப்பினர் இல்லை என மற்றவர்களை சொல்லும் உரிமை பழனிசாமிக்கு இல்லை என தேர்தல் ஆணையத்தில் பெங்களூரு வா.புகழேந்தி நேற்று மனு அளித்துள்ளார்.
தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை வேட்பாளர்களுக்கு வழங்க, படிவங்களில் கையெழுத்திடும் அதிகாரம் பழனிசாமிக்கு வழங்கப்பட்டதை எதிர்த்து திண்டுக்கல்லை சேர்ந்த சூரியமூர்த்தி, தூத்துக்குடியை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பெங்களூரு வா.புகழேந்தி ஆகியோர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர். தேர்தல் ஆணையம் புகாரை பரிசீலிக்கவில்லை என நீதிமன்றங்களிலும் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதில், சூரியமூர்த்தி தொடர்ந்த வழக்கில், பன்னீர்செல்வம் உள்ளிட்டோரிடம் கருத்து கேட்டு 4 வாரங்களில் முடிவெடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதன்படி தேர்தல் ஆணையம் கருத்து கேட்டதன் அடிப்படையில், அதிமுக தரப்பிலும், ஓபிஎஸ் உள்ளிட்டோர் தரப்பிலும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதிமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், “அதிமுகவுக்கு எதிராக புகார் அளித்தவர்கள் யாரும் அதிமுக உறுப்பினர்கள் இல்லை” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதில் அளித்து, வா.புகழேந்தி தேர்தல் ஆணையத்தில் நேற்று அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
டெல்லி உயர் நீதிமன்றத்தில் நான் தொடுத்திருந்த வழக்கில், நான் அதிமுக உறுப்பினர் இல்லை என்ற வாதத்தை பழனிசாமி தரப்பில் எடுத்து வைத்தும், வேறு பல விஷயங்களை சொல்லியும், அதை நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகுதான், எனது மனுவைப் பரிசீலிக்க தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதிமுகவில் ஆரம்ப காலம்தொட்டு பல பொறுப்புகளை வகித்து வந்துள்ளேன். அதில் குறிப்பாக கர்நாடக மாநில அதிமுக இணைச் செயலாளர், செயற்குழு உறுப்பினர், பொதுக்குழு உறுப்பினர், மாநில பேரவை செயலாளர் மற்றும் இணைச் செயலாளர் பதவிகளை வகித்துள்ளேன். 3 முறை சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டிருக்கிறேன். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்பதற்கு முன் பல பொறுப்புகளை வகித்திருக்கிறேன். பல தேர்தல்களில் பொறுப்பாளராகவும் பணியாற்றி இருக்கிறேன். 2017-ம் ஆண்டு இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டபோது, பன்னீர்செல்வம், செம்மலை ஆகியோருக்கு இரட்டை இலை சின்னம் வழங்கப்பட்டது. அந்த வழக்கில் நானும், பழனிசாமியும் இடை மனுதாரராக இருந்தோம். அதை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ளது. பின்னர் கட்சி தேர்தல் நடத்தி அதன் மூலம் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
பின்னர் இருவருக்கும் பிரிந்து செயல்பட்டபோது, தேர்தல் ஆணைய பதிவேட்டில் ஒருங்கிணைப்பாளராக உள்ள பன்னீர்செல்வம், என்னை அதிமுக பொதுச் செயலாளராக நியமித்துள்ளார். உச்ச நீதிமன்ற உத்தரவின்படி சிவில் வழக்கு நிலுவையில் உள்ளதால் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்த நிலையில் யாரெல்லாம் பழனிசாமிக்கு எதிராக குரல் எழுப்புகிறார்களோ மற்றும் தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கிறார்களோ அவர்களை மிக எளிதாக கட்சியில் உறுப்பினர் இல்லை எனச் சொல்லி தட்டிக்கழிக்க பார்க்கிறார். இதைச் சொல்வதற்கு பழனிசாமிக்கு தார்மீக அடிப்படையில் எந்த உரிமையும் இல்லை. இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.