தேர்தல் வரும்போது பொங்கல் பரிசுத் தொகை: அமைச்சர் துரைமுருகன்!

பொங்கல் பரிசுத் தொகை குறித்து பேரவையில் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தேர்தல் வந்தால் பொங்கல் பரிசு தருவது பற்றி பார்க்கலாம் என்று நகைச்சுவையாகப் பதில் அளித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் ஈரோடு தொகுதி தவிர்த்து மற்ற பகுதிகளில் இன்று முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கரும்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சட்டப்பேரவையில் இன்று பொங்கல் பரிசுத் தொகுப்புடன் பரிசுத் தொகை வழங்குவது குறித்து அதிமுக உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். அதிமுக எம்எல்ஏ கோவிந்தசாமி பேசுகையில், அதிமுக ஆட்சிக் காலத்தில் பொங்கல் பரிசுத் தொகையாக ரூ.2500 வழங்கப்பட்டது. ஆனால் அப்போது ரூ.5000 கொடுக்க வேண்டும் என திமுக கூறியது. இப்போதோ ரூ.1,000 கூட கொடுக்கவில்லை என்று கூறியிருந்தார்.

இதற்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் துரைமுருகன், 2021ஆம் ஆண்டு தேர்தல் இருந்தது. அதனால் நீங்கள் 2500 ரூபாய் கொடுத்தீர்கள். ஆனால் இப்போது தேர்தல் காலம் இல்லை. பொங்கல் பரிசுத் தொகை வழங்குவது குறித்து தேர்தல் வரும்போது பார்க்கலாம் என்று கூறியது கலகலப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சர் சக்கரபாணி பேசுகையில், பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முன்னாள் முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார். ஆனால், அதன் பிறகு அதிமுக ஆட்சியின்போதும் பொங்கல் பரிசுத் தொகை வழங்கப்படவில்லை. ஆனால், தேர்தல் வந்தபோதுதான் அதிமுக அரசு பரிசுத் தொகையும் வழங்கியது என்று கூறியிருந்தார்.