திருப்பதியில் இலவச தரிசன டோக்கன் வாங்கும்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி சேலத்தைச் சேர்ந்த பெண் உட்பட ஆறு பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வைகுண்ட ஏகாதசியையொட்டி வரும் 10-ம் தேதி முதல், 19-ம் தேதி வரை திருமலையில் பக்தர்கள் அனைவருக்கும் சொர்க்கவாசல் தரிசன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக திருப்பதியில் 8 இடங்களில் 91 கவுண்ட்டர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், திருப்பதியின் விஷ்ணு நிவாஸம் பகுதியில் நடைபெற்ற இலவச டோக்கன் விநியோகத்தின் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் முண்டியடித்ததாக கூறப்படுகிறது. இதனால் அங்கு கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதில் ஆறு பக்தர்கள் மூச்சுத் திணறி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. உயிரிழந்தவர்களில் சேலத்தைச் சேர்ந்த மல்லிகா என்ற பெண்ணும் ஒருவர் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவத்துக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் உடனடியாக மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இலவச தரிசன டோக்கன் வாங்கும்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஆந்திராவின் திருப்பதி கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவத்தால் மிகுந்த மனவேதனையடைந்தேன். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டிக்கொள்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் ஆந்திர அரசு மேற்கொண்டு வருகிறது’ என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், திருப்பதி கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “திருப்பதியில் ஏற்பட்ட துயரமான கூட்ட நெரிசல் சம்பவம் மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய வேண்டும். இந்த கடினமான நேரத்தில் காங்கிரஸ் தலைவர்களும், தொண்டர்களும் பாதிக்கப்பட்டவர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
இதே போல், ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “திருப்பதி கோவிலில் நடந்த விபத்து மிகவும் வருத்தமளிக்கிறது. உயிரிழந்த ஆன்மாக்களுக்கு கடவுள் அவரது பாதங்களில் இடம் கொடுப்பாராக. காயமடைந்த பக்தர்கள் விரைவில் குணமடைந்து தங்கள் வீடுகளுக்குத் திரும்ப வேண்டும் என்று நான் கடவுளிடம் பிரார்த்திக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.