ஹெச்எம்பிவி தொற்றுக்கு பிரத்யேக சிகிச்சையோ, மருந்தோ இல்லை. 3 முதல் 6 நாட்களில் தானாகவே சரியாகிவிடும் என்று சட்டப்பேரவையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் நேற்று ஹெச்எம்பி வைரஸ் தொற்று குறித்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில் விவாதம் நடைபெற்றது. இதை தொடர்ந்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்து பேசியதாவது:-
ஹெச்எம்பி வைரஸ் தொற்று 50 ஆண்டுகளுக்கு முன்பு கண்டறியப்பட்டது. 2001-ம் ஆண்டிலும் இந்த வைரஸ் தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. குளிர்காலம், இளவேனில் காலங்களில் இந்த வைரஸ் பரவக்கூடும். இந்த நோய்க்கான அறிகுறிகள் சளி, காய்ச்சல், இருமல், சுவாச பாதிப்புகள். இந்த வைரஸ் பாதிப்பு குணமாக 3 முதல் 6 நாட்கள் வரை ஆகும். இணைநோய் உள்ளவர்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டால் ஓரளவு தீவிரத்தன்மை அடைந்து நுரையீரல் பாதிக்கப்படும்.
2024-ல் 714 பேருக்கு பரிசோதனை செய்ததில் பலருக்கு இந்த நோய் பாதிப்பு இருந்தது. தமிழகத்தில் சென்னை, சேலத்தில் இருவர் நோயால் பாதிக்கப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர். அவர்கள் நலமுடன் இருக்கிறார்கள். சுவாசநோய் தொற்றுகள் தானாகவே குணமடையும் என்பதால்தான், மருத்துவ வல்லுநர்கள் இதற்காக சிறப்பு சிகிச்சைகள் தேவை இல்லை என்கின்றனர். இந்த வைரஸுக்கு நோய் எதிர்ப்பு மருந்துகள், தடுப்பூசிகள் இல்லை. உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானியாக இருந்த சவுமியா சுவாமிநாதன், இனி வரும் காலங்களில் வைரஸ் தொற்றுகளுடன் வாழ வேண்டும் என தெரிவித்திருந்தார். அதைத் தான் நான் தெரிவித்தேன்.
இது வீரியம் மிக்க வைரஸ் அல்ல. இதற்கென பிரத்யேக மருந்துகளும் இல்லை. பிரத்யேக சிகிச்சைகளும் இல்லை. பரிசோதனைகள் செய்து கொள்ளும் அவசியமும் இல்லை. இதனால் நாம் பெரிய அளவில் பயப்பட தேவையில்லை. இதற்காக தனியாக பிரத்யேக படுக்கை வசதிகளும் தேவையில்லை. இவ்வாறு அவர் பேசினார்.