மீண்டும் முந்தைய இந்திய கல்வி முறைக்கு திரும்ப முயற்சி செய்கிறோம்: ஆளுநர் ஆர்.என்.ரவி!

“காலனித்துவ ஆதிக்க இந்திய கல்வி முறையை மாற்றுவதற்காக புதிய கல்விக் கொள்கை கொண்டுவரப்படுகிறது” என்று தென் மண்டல பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கான இரண்டு நாள் கருத்தரங்கில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். மேலும், “துரதிருஷ்டவசமாக நாம் பாரம்பரியத்தை இழந்துவிட்டோம். மீண்டும் முந்தைய இந்திய கல்வி முறைக்கு திரும்ப முயற்சி செய்கிறோம்” என்றார்.

வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் அகில இந்திய பல்கலைக்கழக சங்கத்தின் தென் மண்டல துணைவேந்தர்கள் கருத்தரங்கம் இன்று (டிச.10) தொடங்கியது. இரண்டு நாள் கருத்தரங்கின் தொடக்க விழா நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக பங்கேற்றுப் பேசியதாவது:-

புதிய கல்விக் கொள்கை மாற்றத்துக்காக கொண்டுவரப்படுகிறது. மனப்பாடம் செய்தல், கற்றல், தேர்வு முறை போன்றவற்றில் இருந்து மாறுபடுகிறது. கற்றல், கற்பித்தல் நமது பாரம்பரியத்தில் இருந்து தேவை அதிகமாக உள்ளது. புதிய கல்வி கொள்கையைப் பற்றி பல கேள்விகள் நமக்குள் இருக்கலாம். ஆனால், நாம் மாற வேண்டும். இந்த நாட்டை சிறப்பாக மாற்ற வேண்டும். கற்றல், கற்பித்தலில் மாற்றம் எளிதானது இல்லை. ஆங்கிலேய காலனித்துவத்தால் நமது கற்றல், கற்பித்தல் மாறிவிட்டது. 19-ம் நூற்றாண்டு தொடக்கத்தில் இந்திய கல்வி முறை குறித்து ஆய்வு செய்தனர். அதன் பிறகே இந்திய கல்வி முறை நிறுத்தவும் காரணமாக இருந்தது. 18-ம் நூற்றாண்டு வரை இந்தியா உலக பொருளாதாரத்தின் முன்னே சென்ற இயந்திரமாக இருந்தது.

மேற்கில் ரோமானிய பேரரசில் இருந்து கிழக்கில் சீனா வரை நமது சந்தையாக இருந்தது. அப்போது, அமெரிக்காவும், ஆஸ்திரேலியாவும் காலனி ஆதிக்கத்தில் இருந்தன. அந்த நேரத்தில் இந்தியாவின் பூர்விக கல்வி முறை குறித்த கடிதம் கிழக்கிந்திய கம்பெனிக்கும், எடின்பர்க்கு அனுப்பினர். அதன் பிறகு இந்தியாவை காலனிப்படுத்த தொடங்கினர். மேலும், இந்தியாவில் இருந்த அறிவியல், கணிதம் பற்றி தெரிந்துகொண்டனர். மேற்கத்திய சிந்தனைகளுடன் பாரம்பரிய இந்திய கல்வி முறையை மாற்றியமைக்க விரும்பினர். இந்தியாவில் பெங்கால், பம்பாய், சென்னை பிரசிடென்சிகளின் அறிக்கையின் அடிப்படையில் கற்றலின் அடிப்படையில் தேர்ச்சி பெற்று அவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப சேவை செய்யும் வகையில் மாற்றினர். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகும் அதை நாம் பின்பற்றுவது துரதிர்ஷ்டவசமானது.

பாரதத்தில் கல்வியை யாரும் கட்டுப்படுத்தவில்லை. நாளந்தா பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகளில் அப்போதைய மவுரிய அரசு எந்த நேரத்திலும் தலையிடவில்லை. குருகுல கல்வியில் எந்த ஓர் அரசரும் கட்டுப்பாடுகள் விதிக்கவில்லை. குருகுல கல்வி முறை காலனித்துவத்தால் மாற்றப்பட்டது. காலனி ஆதிக்க காலத்தில் இருந்த கணித மேதை ராமானுஜர் தனது பட்டமளிப்பு உரையில் நமது கல்வி முறை புத்தகப் புழுக்களாக புத்தகங்களை சாப்பிடுகிறார்கள். அவை புழுதியை மட்டும் உற்பத்தி செய்கின்றன என்றார். பாரதத்தில் அறிவை உற்பத்தி செய்வதே மரபாக இருந்தது. துரதிருஷ்டவசமாக நாம் பாரம்பரியத்தை இழந்துவிட்டோம். மீண்டும் முந்தைய இந்திய கல்வி முறைக்கு திரும்ப முயற்சி செய்கிறோம். இது ஆராய்ச்சி மற்றும் புதுமையான கண்டுபிடிப்புகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.

கடந்த நான்கு ஆண்டுகளில் அறிவுசார் சொத்துரிமை பதிவு அறிக்கையின் அடிப்படையில் இந்தியா 400% வளர்ச்சியை கண்டுள்ளது. இது 2033-ல் 88 ஆயிரமாக இருக்கும். நமது கல்வி நிறுவனங்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருந்து மேலும் சுதந்திரமாக இருக்க வேண்டும். தன்னாட்சி பெற்றிருக்க வேண்டும்.

மாநில பல்கலைக்கழகங்கள் ஆரோக்கியமாக இல்லை. மத்திய அல்லது கூட்டாட்சி குறித்து தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். இந்தியச் சூழலில் நமது கூட்டாட்சி அமெரிக்க கூட்டாட்சி இல்லை. இங்கு இருப்பது ஓர் இசைவான ஒன்றியம். இந்தியா சுதந்திரம் அடைந்தபோது 15 மாநிலங்கள் இருந்தன. தற்போது அவை 28 ஆக உள்ள நிலையில் இந்த எண்ணிக்கை அதிகரிக்காது என்ற உத்தரவாதம் இல்லை.

நாம் வளர, தொழில்நுட்பத் துறையில் வளர வேண்டும். ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு அதிக உந்துதல் உள்ளது. கற்றல் கற்பித்தலில் இருந்து ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை ஒரு பகுதியாக நாம் இணைக்க வேண்டும். குருகுல கல்வி முறையில் ஆசிரியர், மாணவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் கற்றுக்கொண்டனர். ஆசிரியர் மாணவர் இடையே உணர்வு ரீதியிலான தொடர்பு இருக்க வேண்டும். கற்றலில் புதுமை, ஆசிரியர்களுக்கான மதிப்பீடு இருக்க வேண்டும். எங்கள் மாநிலத்தில் 6500-க்கு மேற்பட்ட ஆராய்ச்சி மாணவர்களை உருவாக்குகிறோம். அதன் தரம் குறித்து யாரும் பேசுவதில்லை. ஆனால், அவர்களின் மதிப்பீடு உலகளவில் இருக்க வேண்டும் என்பதை சிந்திக்க வேண்டும்.

இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து கொண்டு வருகிறது. இதில், குறு, குறு தொழில் நிறுவனங்கள் முக்கிய இயந்திரமாக செயல்படுகிறது. அடுத்த 25 ஆண்டுகளில் உலகின் விதியை வடிவமைக்கும் நிலையில் நாம் இருக்க வேண்டும். இந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு பல நல்ல யோசனைகள் பற்றிய விவாதம் நல்ல கொள்கைகள் வெளிப்படும்.நமது தேசிய கல்வி முறை வெளிச்சத்தில் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, கருத்தரங்கில் விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் பேசும்போது, ‘‘இந்தியாவில் 55 ஆயிரம் கல்லூரிகளும், 1200 பல்கலைக்கழகங்களும் இருந்தபோதிலும் ஆராய்ச்சியில் பின்தங்கி உள்ளோம். அதற்கு கல்விக்கு போதுமான அளவில் அரசுகள் நிதி ஒதுக்குவதில்லை. கல்வி இருந்தால்தான் நாடு பொருளாதாரத்தில் முன்னேற முடியும். அதிகமாக கல்விக்கு செலவழித்தால் நாடு வளரும். கல்விக் கொள்கையில் எந்த அரசுகளின் குறிக்கீடுகளும் இருக்கக் கூடாது. கல்விக்கு அதிகமாக செலவழிக்க பணம் இல்லை என அரசு கூறுகிறது. பணத்தை சேமித்தால் கல்விக்கு அதிகமாக செலவழிக்கலாம். ஆராய்ச்சிக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்’’ என்றார்.