லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீக்கு இதுவரை 10 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 4 நாட்களாக காட்டுத் தீ பற்றி எரிகிறது. இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். முன்னெச்சரிக்கையாக 4 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டு உள்ளனர். 10,000 வணிக கட்டிடங்கள், 30,000 வீடுகள் தீயில் எரிந்து நாசமாகி உள்ளன. சுமார் ரூ.13 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டிருக்கிறது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் அமைந்துள்ளது. அந்த நகரின் மத்தியில் ஹாலிவுட் பகுதி உள்ளது. அங்கு முன்னணி திரைப்பட நிறுவனங்கள், அவற்றின் திரைப்பட நகரங்கள் அமைந்துள்ளன. இதன்காரணமாக ஹாலிவுட் திரையுலகின் தலைநகராக லாஸ் ஏஞ்சல்ஸ் விளங்குகிறது. கடந்த 7-ம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸின் பாலிசேட்ஸ் பகுதியில் காட்டுத் தீ ஏற்பட்டது. மலைப்பகுதிகள், எளிதில் தீப்பற்றி எரியும் பைன் மரங்களால் காட்டுத் தீ அதிவேகமாக பரவியது. தற்போது பாலிசேட்ஸ், ஈட்டன், ஹர்ஸ்ட், லிடியா ஆகிய பகுதிகளில் கட்டுக்கடங்காமல் தீ பரவி வருகிறது.

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சுமார் ஒரு கோடி பேர் வசிக்கின்றனர். இதில் காட்டுத் தீ பரவும் பகுதிகளில் இருந்து சுமார் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டு உள்ளனர். அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸின் வீடு லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ளது. தற்போது அவர் அந்த வீட்டில் இல்லை. எனினும் அவரது வீட்டில் பணியாற்றும் தொழிலாளர்கள் உட்பட அனைவரும் உடனடியாக வெளியேற உத்தரவிடப்பட்டு உள்ளது.

காட்டுத் தீயில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் பலத்த தீக்காயம் அடைந்துள்ளனர். லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீ தொடர்பாக சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோக்கள், புகைப்படங்கள் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றன.

இதுகுறித்து அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாண தீயணைப்பு படை வட்டாரங்கள் கூறியதாவது:-

கடந்த 7-ம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் காட்டுத் தீ பரவத் தொடங்கியது. கடந்த 4 நாட்களில் தீ மளமளவென்று பரவி தற்போது சுமார் 40,000 ஏக்கர் பரப்பில் பற்றி எரிகிறது. இதில் 29,000 ஏக்கர் பகுதி முழுமையாக தீயில் கருகிவிட்டது. சுமார் 10,000-க்கும் மேற்பட்ட மிகப்பெரிய வணிக கட்டிடங்கள் தீக்கிரையாகி உள்ளன. சுமார் 30,000-க்கும் மேற்பட்ட வீடுகள் தீயில் எரிந்து நாசமாகி உள்ளன. பிரபல இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் மற்றும் ஹாலிவுட் நடிகர், நடிகைகளின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள வீடுகளும் தீக்கிரையாகி உள்ளன. ஒட்டுமொத்தமாக ரூ.13 லட்சம் கோடி அளவுக்கு பொருட் சேதம் ஏற்பட்டிருக்கிறது.

ஒவ்வொரு நிமிடத்துக்கும் 5 கால்பந்து மைதானங்கள் அளவுக்கு தீ பரவுகிறது. இப்போதைய நிலையில் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. சுமார் 7,500-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் இரவு, பகலாக தீயை அணைக்க போராடி வருகின்றனர். ஹெலிகாப்டர்கள், சிறப்பு விமானங்கள் மூலமும் தண்ணீர் வாரியிறைக்கப்பட்டு தீயை அணைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு தீயணைப்பு படை வட்டாரங்கள் தெரிவித்தன.

காட்டுத் தீ பரவும் பகுதிகளில் வசித்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு உள்ளனர். இந்த இக்கட்டான சூழலை பயன்படுத்தி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதை தடுக்க காட்டுத் தீ பரவும் இடங்களில் ஊரடங்கு அமல் செய்யப்பட்டிருக்கிறது. சுமார் 20-க்கும் மேற்பட்ட திருடர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். திருட்டுகளை தடுக்க அமெரிக்க தேசிய படையை சேர்ந்த வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்து விட்டு காட்டுத் தீயை கட்டுப்படுத்துவது தொடர்பாக உயரதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீயை அவர் பேரிடராக அறிவித்துள்ளார்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் தெற்கு பகுதியில் பருவநிலை மாறுபாடு காரணமாக கடந்த 8 மாதங்களாக போதிய மழை பெய்யவில்லை. வழக்கமான மழைப்பொழிவில் 10 சதவீதம் மட்டுமே மழை பெய்திருக்கிறது. இதன்காரணமாக தெற்கு கலிபோர்னியா பகுதியில் கடந்த சில மாதங்களாக கடும் வறட்சி நிலவியது. மரங்கள் பட்டு போயிருந்தன. செடி, கொடிகள் கருகி இருந்தன. காட்டுத் தீ ஏற்பட்டபோது சுமார் 70 கி.மீ. முதல் 130 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது. இதனால் அதிவேகமாக தீ பரவியது. காற்றின் வேகம் மேலும் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே இப்போது லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஏற்பட்டிருக்கும் காட்டுத் தீ கலிபோர்னியா மாகாணத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பரவும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது.

பருவநிலை மாறுபாட்டால் உலகின் பல்வேறு நாடுகளில் வறட்சி, அளவுக்கு அதிகமான மழைப்பொழிவு, காட்டுத் தீ உள்ளிட்ட பேரழிவுகள் ஏற்பட்டு வருகின்றன. இதை தடுக்க அமெரிக்கா உட்பட அனைத்து உலக நாடுகளும் ஓரணியாக செயல்பட வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.