மத்திய அரசு அறிவித்தால் மட்டுமே டங்ஸ்டன் எதிர்ப்பு போராட்டம் வாபஸ்: போராட்டக்குழு!

மேலூர் பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் வராது என்ற பாஜக தலைவர் அண்ணாமலையின் வார்த்தைகளை நம்ப முடியாது. மத்திய அரசு அதிகாரபூர்வமாக அறிவித்த பிறகே போராட்டம் நிறுத்தப்படும் என டங்ஸ்டன் சுரங்கத் திட்ட எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

மேலூர் பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள், விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதையடுத்து மேலூர் பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க விடமாட்டோம் என தமிழக அரசு தரப்பில் அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியரும், டங்ஸ்டன் சுரங்கம் வராது என பாஜக தலைவர் அண்ணாமலையும் போராட்டக்களத்துக்கு நேரில் வந்து உறுதியளித்தனர். இதையடுத்து டங்ஸ்டன் சுரங்க எதிர்ப்பு போராட்டத்தை கைவிட பல்வேறு தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மத்திய அரசு அறிவிக்கும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என டங்ஸ்டன் சுரங்கத் திட்ட எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இது தொடர்பாக கூட்டமைப்பு சார்பில் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

டங்ஸ்டன் விவகாரத்தில் தமிழக பாஜகவின் நிலைப்பாடு வரவேற்கத்தக்கது தான். அதேநேரத்தில் மத்திய கனிம வளத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி, டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் கைவிடப்படுவதாக முறைப்படி அறிவிப்பு செய்து அதை அரசிதழில் வெளியிட வேண்டும். அதுவரை டங்ஸ்டன் திட்டம் ரத்து செய்யப்படும் என்ற அறிவிப்பை நம்ப முடியாது.

அ.வல்லாளப்பட்டி கூட்டத்துக்கு அண்ணாமலை வந்திருந்தபோது அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பாஜகவை தவிர்த்து பிற மக்கள் அனைவரும் அண்ணாமலை லண்டனிலிருந்து திரும்பியதும், டங்ஸ்டன் திட்டத்தை நல்ல திட்டம் என்று வரவேற்று பேசியுள்ளார். இதனால் மத்திய கனிம மற்றும் சுரங்கத்துறை அமைச்சகம் மூலம் முறையான அறிவிப்பு வந்தால் ஏற்கலாம். அதைவிட்டு வெற்று வாக்குறுதிகளை நம்ப வேண்டாம் எனக் கூறியுள்ளனர்.

அ.வல்லாளபட்டி மக்களின் உறுதியான கருத்தை டங்ஸ்டன் சுரங்கத் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு முழுமையாக ஏற்கிறது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டை எதிர்த்து போராடியதற்காக 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதையும், டெல்லியில் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப் விவசாயிகள் 700-க்கும் மேற்பட்ட உயிர்களை பலிகொடுத்து போராடி வந்ததை ஆண்டுக்கணக்கில் கண்டுகொள்ளாமல் இருந்த பாஜகவின் அரசியலும், வேதாந்தா நிறுவனத்தின் கடந்த கால செயல்பாடுகளும் எளிதாகக் கடந்துவிடக் கூடிய ஒன்றல்ல என்பதை தமிழ்நாடு மக்களும், டங்ஸ்டன் சுரங்கத் திட்ட எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பும் அறிந்தே வைத்துள்ளோம்.

எனவே, அண்ணாமலை வெறுமனே வாய்வார்த்தையில் மக்கள் போராட்டத்தை திசை திருப்பாமல், மத்தியில் ஆட்சியில் உள்ள தனது கட்சி பிரதமரான நரேந்திர மோடியை வலியுறுத்தி சட்ட அங்கீகாரம் தரும் எழுத்துபூர்வமான டங்ஸ்டன் திட்ட ரத்து அறிவிப்பு வெளிவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை கூட்டமைப்பு சுட்டிக்காட்டுகிறது.

தமிழக ஆட்சியாளர்களும் தாங்கள் ஆட்சியில் இருக்கும்வரை திட்டம் வராது என்று வாய்வழி உறுமொழி அளிப்பதோடு நின்றுவிடாமல், நிரந்தரமாக அனைத்துவகையான அழிவுத் திட்டங்களிலிருந்தும் மேலூரை காப்பாற்ற இப்பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண்/தொல்லியல் மண்டலமாக அறிவிக்க உடனடி நடவடிக்கை எடுப்பதுதான், போராடும் மக்களின் கோரிக்கைக்கும் உணர்வுகளுக்கும் மதிப்பளிப்பதாக அமையும். அதுவரை டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை எதிர்த்து தொடர்ந்து போராடிவரும் மேலூர் பகுதி மக்களுக்கு காவல்துறை எவ்விதமான இடையூறுகளும் அளிக்கக்கூடாது என்பதை இந்த நேரத்தில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.