பெரியார் கூட்டுக் குடிநீர் திட்டத்தை மார்ச் மாதம் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் என, மதுரையில் நடந்த புதிய பாதாள சாக்கடை திட்டப்பணி அடிக்கல் நாட்டுவிழாவில் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
மதுரை மாநகராட்சி சார்பில், அம்ருத் 2.0 திட்டத்தில் மதுரை கிழக்கு, திருப்பரங்குன்றம், வடக்கு, தெற்கு சட்டமன்ற தொகுதிகளில் 31 வார்டு மக்கள் பயன்பெறும் வகையில் ரூ.471.89 கோடியில் 500 கி.மீட்டர் தூரத்திற்கான புதிய பாதாள சாக்கடை திட்டப் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா உத்தங்குடியில் நடந்தது. தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். விழாவில் அமைச்சர் கேஎன்.நேரு பேசியதாவது:-
மதுரை மக்கள் மற்றும் கிழக்கு தொகுதியுடன் திருச்சியை ஒப்பிடுகையில் கடந்த 3 ஆண்டில் மதுரைக்கு ரூ.5 ஆயிரம் கோடி நிதியை முதல்வர் வழங்கியுள்ளார். திருப்பரங்குன்றம் பகுதியில் விடுப்பட்ட பகுதியில் குடிநீர் திட்டத்திற்கு ரூ.300 கோடி கேட்டுள்ளனர். மதுரையை பொறுத்தவரை சட்டமன்ற உறுப்பினர்கள் என்ன கேட்கிறார்களோ அவற்றை நிறைவேற்றவே முதல்வர் என்னை வைத்துள்ளார். மேலூர், திருமங்லகம், உசிலம்பட்டிக்கு சாக்கடை திட்டம் உள்ளிட்ட பணிக்காக ரூ.1,800 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மதுரை புறநகர் பகுதியில் பாதுகாக்கப்பட்ட குடிநீருக்காக ரூ.1559.7 கோடியை அரசு வழங்கியது. மாநகரில் ஏற்கெனவே 140 எம்எல்டி (ஒரு எம்எல்டி- 10 லட்சம் லிட்டர்) வழங்கப்படுகிறது. மேலும், 225 எம்எல்டி தேவை இருக்கிறது. 125 எம்எல்டிக்கான புதிய திட்டமும் கொண்டு வரப்படுகிறது. இதற்காக ரூ.1695.16 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் குடிநீருக்காக மட்டுமே ரூ.3,200 கோடி அரசு வழங்கியுள்ளது. மதுரையில் 24 மணி நேரமும் தொடர்ந்து குடிநீர் கிடைக்கும் பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டம் முதல்வரால் தொடங்கி வைக்க அமைச்சர் பி.மூர்த்தி முதல்வரிடம் கோரினார். இதன்படி, மார்ச் மாதம் இத்திட்டத்தை தமிழக முதல்வர் தொடங்கி வைக்கிறார். இதன்மூலம் மதுரை மாநகராட்சி, புறநகர் பகுதிகளில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் முழுமையாக கிடைக்கும்.
மேலூர் பகுதியில் டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, நான் இருக்கிறேன் என கூறி மதுரை, மேலூர் பகுதி மக்களுக்காகவே உறுதியளித்து முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார். மதுரை மாநகராட்சி பகுதியில் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிக்கென மதுரை மாநகராட்சிக்கு மட்டும் ரூ.130 கோடி நேற்று முன்தினம் கூட முதல்வர் வழங்கி இருக்கிறார். மார்ச் மாதத்திற்குள் மேலும், ரூ.60 கோடி அதிகரித்து ரூ.190 கோடி நிதியை முதல்வர் வழங்க இருக்கிறார். தொடர்ந்து மதுரை மக்களுக்கான பல்வேறு திட்டங்களையும் திமுக அரசு செய்யும். இவ்வாறு அமைச்சர் பேசினார்
நிகழ்ச்சியில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மேயர் இந்திராணி, மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார், ஆட்சியர் சங்கீதா, துணை மேயர் நாகராஜ், நகராட்சி நிர்வாக இயக்குநர் சிவராஜ், எம்எல்ஏக்கள் கோ.தளபதி, பூமிநாதன், தெற்கு மாவட்ட திமுக செயலாளர் மணிமாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். உத்தங்குடி நிகழ்வுக்கு முன்பாக மேலூரில் ரூ.660.00 லட்சத்தில் கட்டிய முடிக்கப்பட்ட கர்னல் பென்னிக் குயிக் புதிய பேருந்து நிலையம் மற்றும் 23வது வார்டு அம்மன் நகரில் அறிவுசார் மையம், நூலகம், சிவன் கோயில் தெருவில் நகராட்சி தொடக்கப்பள்ளி கூடுதல் கட்டிடத்தை அமைச்சர், கேஎன்.நேரு திறந்து வைத்தார்.
தொடர்ந்து அலங்காநல்லூர் பேரூராட்சியில் டாக்டர் அம்பேத்கர் பேருந்து நிலைய மேம்பாடு பணிகளையும் அமைச்சர் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிகளில் அமைச்சர் பி. மூர்த்தி, ஆட்சியர் சங்கீதா உள்ளிட்ட அதிகாரிகளும் பங்கேற்றனர்.