சமூக விரோதிகளின் கூடாரமாக சமூக வலைதளங்கள் மாறி வருகின்றன என முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி பேசினார்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க, திண்டுக்கல் மாநகர கிளை சார்பில் இலக்கிய சந்திப்பு நிகழ்ச்சி திண்டுக்கல்லில் இன்று நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட செயலாளர் கவிவாணன் தலைமை வகித்தார். கவிஞர் தாமோ எழுதிய ‘பகலைத்தொடாத வெளிச்சம்’ என்ற நூலை வெளியிட்டு முன்னாள் எம்எல்ஏ கே.பாலபாரதி பேசியதாவது:-
சமூக விரோதிகள் தற்போது சமூக வலைதளத்தை ஆக்கிரமித்து இருக்கிறார்கள். அவர்களிடமிருந்து எந்த நல்ல வார்த்தைகளும் வராது. அவர்களுக்கு சமூக அக்கறை கிடையாது. வலைதளத்தில் என்ன பதிவிட்டு இருக்கிறதோ அதை கண் மூடி பதிவிடுவதை வேலையாக வைத்திருக்கிறார்கள்.
பெண் கவிஞர்கள் பலர் சமூக வலைத்தளத்தில் இருந்து வெளியேறி இருக்கிறார்கள். ஒரு பெண்ணாக சமூக வலைதளத்துக்குள் நுழைந்தால் அவர் பெண்ணாக வெளிவர முடியாது. வன்முறைகள் வெளியே நடப்பதாக நீங்கள் நினைக்க வேண்டாம். பெண்ணை மிகக் கேவலமாக சித்தரிப்பதும் பதிவிடுவதும் கூட ஒரு வகையான வன்முறை தான். ஒரு பெண்ணை பெண் என்ற காரணத்திற்காக இழிவுபடுத்துவது கொச்சைப்படுத்துவது அந்த சமூக வலைதளத்துக்குள் மதவெறி சக்திகள் இருக்கிறார்கள், சாதிய வெறியர்கள் இருக்கிறார்கள். இந்த சமூக வலைதளத்துக்குள் தான் நமது கருத்துகளையும் எடுத்துச் செல்ல வேண்டி இருக்கிறது.
சமூக வலைதளத்தில் இருப்பவர்கள் நேரடியாக மக்கள் மத்தியில் வருவதில்லை. ஆனால் நாம் சமூக வலைதளத்தில் இயங்குவது மட்டுமல்லாமல் மக்களையும் நேரடியாக சந்திக்கிறோம். இன்றைக்கு புதிய இளம் கவிஞர்கள் வருகிறார்கள், அவர்களின் எழுத்துக்கள் வாசிக்கும்போது நாம் இங்கே பழமைவாதிகளாக இருப்பதாக நவீனத்துடன் கவிதைகள் படைக்கப்படுகின்றன. இதுபோன்ற கவிஞர்களை கண்டறிந்து நாம் ஊக்குவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.