7000 கோடி வரி கட்ட தயார்: நிர்மலா சீதாராமனுக்கு சுகேஷ் சந்திரசேகர் கடிதம்!

பணமோசடி உள்பட பல்வேறு குற்றச்ச்சாட்டுக்களில் கைதாகி டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதியுள்ளாராம். தனக்கு சொந்தமான வெளிநாட்டு நிறுவனங்கள் மூலமாக கிடைத்த வருமானத்திற்காக வரியாக ரூ.7 ஆயிரம் கோடி கட்ட தயாராக உள்ளதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பெங்களூரைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர். தொழிலதிபர்களிடம் பண மோசடி செய்து ஏமாற்றிய வழக்கில் கைது செய்யப்பட்டு டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சுகேஷ் சந்திரசேகருக்கு சிறையில் உள்ள தொழில் அதிபர் ஷிவிந்தர் சிங் ஜாமீன் வாங்கி தருவதாக சிறையிலேயே நட்பாக பேசி, அவரின் மனைவியான அதிதி சிங்கிடம் ரூ.200 கோடி மோசடி செய்தாக கூறப்படுகிறது. இந்த வழக்கிலும் சுகேஷ் சிறையில் உள்ளார். 7 வயது முதலே யாரையாவது ஏமாற்றி பணம் சம்பாதிக்க தொடங்கிவிட்ட சுகேஷ் சந்திரசேகர், 2007ஆம் ஆண்டு தான் ஒரு உயர் அதிகாரி என்றும் அரசு வேலை வாங்கித் தருவதாகவும் 100-க்கும் மேற்பட்டோரிடம் ரூ75 கோடியை பெற்றுள்ளதாக அவர் மீது குற்றச்சாட்டு உள்ளது. அது போல் 2017ஆம் ஆண்டு டிடிவி தினகரனிடம் 50 கோடியை லஞ்சமாக பெற முயற்சித்தார். இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் சுகேஷ் சந்திரசேகர் தனக்கு 2024 – 2025 நிதி ஆண்டில் வெளிநாடுகளில் உள்ள சொத்துக்கள் மூலமாக ரூ.22,410 கோடி ரூபாய் கிடைத்துள்ளதாகவும் இதற்காக ரூ.7,640 கோடி ரூபாயை வரியாக கட்ட தயராக உள்ளதாகவும், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதியுள்ளார். தனது வழக்கறிஞர் வாயிலாக இந்த கடிதத்தை சிறையில் இருந்தே எழுதியுள்ளார். அமெரிக்கா, பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள் ஆகிய இடங்களில் கேமிங்க் நிறுவனங்கள் மூலம் 2.70 பில்லியன் டாலர் 2024 ஆம் ஆண்டில் கிடைத்ததாகவும் கூறியுள்ளார். அதுபோக தனக்கு எதிராக நிலுவையில் உள்ள வருமான வரி வழக்குகளையும் முடிக்க தயாராக இருப்பதாகவும் அந்த கடிதத்தில் கூறியுள்ளாராம். மேலும் இந்த சொத்துக்கள் எல்லாம் சட்டப்பூர்வமாக சம்பாதித்தது எனவும் சர்வதேச சட்டங்களுக்கு இணங்கி செயல்படுவதாகவும் கூறியுள்ளாராம்.

அது மட்டும் இன்றி, பிரதமர் மோடியின் மிகச்சிறந்த தலைமையின் கீழ் தற்போது பெருமை மிக்க இந்தியனாக இருப்பதகாவும், இந்தியாவை உலகத்தரமாக உயர்த்துவதற்காக தனது தரப்பு பங்களிப்பை அளிக்க விரும்புவதாகவும் கூறியுள்ள சுகேஷ் சந்திரசேகர், தனது வெளிநாட்டு வருமானங்களை இந்தியாவில் மேலும் முதலீடு செய்ய விரும்புவதாகவும் கூறியிருக்கிறார்.