காவல் சார்- ஆய்வாளர் பணிக்கான ஆள்தேர்வு அறிவிக்கையை உடனே வெளியிட வேண்டும்: அன்புமணி!

காவல் சார்- ஆய்வாளர் பணிக்கான ஆள்தேர்வு அறிவிக்கையை உடனே வெளியிட வேண்டும் என்றும், வயது வரம்பை 3 ஆண்டுகள் உயர்த்த வேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

தமிழக காவல்துறையில் சார்-ஆய்வாளர் பணிக்கான ஆள்தேர்வு அறிவிக்கை கடந்த ஆண்டு ஜூன் மாதம் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருந்த நிலையில், அதன்பின் 7 மாதங்களாகியும் இன்று வரை ஆள்தேர்வு அறிவிக்கை வெளியிடப்படவில்லை. காவல்துறைக்கு சார்-ஆய்வாளர்களை தேர்வு செய்யும் விவகாரத்தில் தமிழக் அரசும், காவல்துறையும் காட்டும் அலட்சியம் கண்டிக்கத்தக்கது.

தமிழக காவல்துறையில் ஒவ்வொரு ஆண்டும் சில ஆயிரம் காவல் சார் ஆய்வாளர்கள் ஓய்வு பெறும் நிலையில், அதனால் ஏற்படும் காலியிடங்களை நிரப்ப ஒவ்வொரு ஆண்டும் ஆள்தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. ஆனால், இந்த விவகாரத்தில் தமிழக அரசோ, காவல்துறையோ போதிய அக்கறை காட்டவில்லை. AD கடந்த ஆண்டு தொடக்கம் வரை காலியாக இருந்த சார்-ஆய்வாளர் பணியிடங்களை நிரப்ப 2024 ஜூன் மாதம் ஆள்தேர்வு அறிவிக்கை வெளியிடப்படும் என்று தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் கடந்த ஆண்டு மே மாதமே அறிவித்திருந்தது. ஆனால், இன்று வரை அறிவிக்கை வெளியாகவில்லை. தமிழ்நாடு காவல்துறைக்கு 621 உதவி ஆய்வாளர்களை தேர்வு செய்வதற்காக கடந்த 2023-ஆம் ஆண்டு மே மாதம் வெளியிடப்பட்ட அறிவிக்கையின் அடிப்படையில் நடத்தப்பட்ட தேர்வுகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை தமிழக அரசு இன்று வரை வெளியிடவில்லை. உதவி ஆய்வாளர்கள் தேர்வில் இட ஒதுக்கீட்டை கடைபிடிப்பதில் நடந்த குளறுபடிகளை சரி செய்யும்படி சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையும் தமிழக அரசு இன்னும் முழுமையாக செயல்படுத்தவில்லை. அதனால், அந்தத் தேர்வை எழுதிய தேர்வர்கள் தங்களுக்கு வேலை கிடைக்குமா, கிடைக்காதா? என்ற மன உளைச்சலில் வாடுகின்றனர்.

தமிழக காவல்துறையில் திசம்பர் 11-ஆம் தேதி நிலவரப்படி தாலுகா காவல்நிலையங்களில் 1453 பணியிடங்கள், ஆயுதப்படைகளில் 649 பணியிடங்கள், சிறப்புக் காவல் படையில் 117 பணியிடங்கள் என மொத்தம் 2219 காவல் சார்-ஆய்வாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அதனால் காவல்துறை பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய சார்-ஆய்வாளர்கள் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. காவல்துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு வசதியாக சார்-ஆய்வாளர் பணிக்கான ஆள்தேர்வு அறிவிக்கையை சீருடைப் பணியாளர் தேர்வாணையம் உடனடியாக வெளியிட வேண்டும். அதற்கு முன்பாக 2023-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிவிக்கையின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட சார்-ஆய்வாளர்கள் பட்டியலை வெளியிட வேண்டும்.

இவை அனைத்துக்கும் மேலாக, கடந்த ஆண்டு ஆள்தேர்வு அறிவிக்கை வெளியிடப்படாததால், பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் சார் -ஆய்வாளர் பணியில் பங்கேற்பதற்காக வயது வரம்பை கடந்து விட்டனர். அவர்கள் எந்தத் தவறும் செய்யாத நிலையில், அவர்கள் தண்டிக்கப்படக் கூடாது. அவர்களின் நலன்களை கருத்தில் கொண்டு சார் -ஆய்வாளர் பணிக்கான வயது வரம்பை பொதுப்பிரிவினருக்கு 33 வயது, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 35 வயது, பட்டியலினத்தவர், பழங்குடியினருக்கு 38 வயதாக உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.