ஆளுநர் ரவி வள்ளலாரை சனாதன தர்மத்துக்குள் மீண்டும் விழுங்க வைப்பதா?: செல்வப்பெருந்தகை!

தமிழகத்தில் மைக் கிடைத்தால் உடனே தமிழ்நாட்டில் ஆளும் அரசையும், சட்டம் ஒழுங்கு பற்றியும் பேசி இங்கே குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப் பெருந்தகை குற்றம்சாட்டி உள்ளார்.

இது தொடர்பாக செல்வப் பெருந்தகை கூறியிருப்பதாவது:-

எல்லா உயிர்களையும் தன் உயிர் போலப் பார்க்க வேண்டும் என்பதைத் தான் திரும்ப திரும்பச் சொன்னவர் வள்ளலார்.

‘சாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே
சாத்திரச்சந்தடிகளிலே கோத்திரச்சண்டையிலே
ஆதியிலே அபிமானத்து அலைகின்ற உலகீர்
அலைந்தலைந்து வீணேநீர் அழிதல் அழகலவே!’

என்கிறார் வள்ளலார் இராமலிங்கர்.

‘சாதியும் மதமும் சமயமும் தவிர்த்தேன் சாத்திரக் குப்பையும் தணந்தேன்’ என்றவர் அவர்.

‘மதித்த சமயமத வழக்கமெல்லாம் மாய்ந்தது வருணாசிரமம் என்னும் மயக்கமும் மாய்ந்தது’ என்கிறார் வள்ளலார்.

வள்ளலார் உருவ வழிபாட்டில் இருந்து அருவ வழிபாட்டிற்கு வாருங்கள் என்றழைக்கிறார். இதில் இருந்தே வள்ளலார் சனாதன தர்மத்திற்கு எதிராக இருந்ததை அறிய முடியும்.

இப்படிச் சொன்ன வள்ளலாரை எப்படி சனாதன தர்மத்தை மீட்டுள்ளார் என்கிறார் ஆளுநர். வள்ளலாரை மீண்டும் மீண்டும் சனாதன தர்மத்திற்குள் விழுங்க வைக்க முயற்சி எடுக்கும் ஆளுநருக்கு வன்மையான கண்டனங்களை பதிவு செய்கிறேன்.

‘அனைத்து மொழிகளுக்கும் சமஸ்கிருதமே மாத்ரு பாஷை’ (அதாவது தாய் மொழி) என்றார் சங்கராச்சாரியார்.

‘அப்படியானால் தமிழ்தான் அனைத்து மொழிகளுக்கும் பித்ரு பாஷை’ (அதாவது தந்தை மொழி) என்றவர் இராமலிங்கர். சமஸ்கிருதத்தை உயர்த்தி தமிழை தாழ்த்தும் போது உடனடியாக வினையாற்றியவர் வள்ளலார். ஆளுநர் அவர்கள், வள்ளலாரைப் பற்றி முழுதாக அறிந்து, படித்து அவர் பற்றிய கருத்தை வெளியிட வேண்டும். யாரோ எழுதிக் கொடுத்து அதை மேடைகளில் பேசக்கூடாது.

மைக் கிடைத்தால் உடனே தமிழ்நாட்டில் ஆளும் அரசையும், சட்டம் ஒழுங்கு பற்றியும் பேசி இங்கே குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார் ஆளுநர். சமூகநீதியை தமிழ்நாட்டில் இரவும், பகலுமாக பேசி வருவதால் தான் விளிம்புநிலை மக்களுக்கும், சிறுபான்மை சமூகத்தினரும் பாஜக ஆளும் மாநிலங்களை விட இங்கே மிகவும் பாதுகாப்பாக உள்ளார்கள். இதையெல்லாம் ஆளுநர் சீர்தூக்கி பார்த்து, அவர் வகிக்கும் பொறுப்புக்கு தகுந்தாற் போல் பொது இடங்களில் பேச வேண்டுமென ஆளுநரை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு செல்வப் பெருந்தகை கூறியுள்ளார்.