நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இந்த ஆண்டு ஓஎம்ஆர் முறை!

இந்த ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு ஒரே நாளில், ஒரே கட்டமாக நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. மேலும், நடப்பாண்டு நீட் தேர்வு ஓஎம்ஆர் (OMR) ஷீட் முறையிலேயே நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நீட் – யுஜி தேர்வு நாடு முழுவதும் அரசு, தனியார் மருத்துவ கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவ படிப்புகளின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET) மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. ஆண்டுதோறும் நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை (NTA) நடத்தி வருகிறது. வரும் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு வரும் மே மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் விண்ணப் பதிவு மற்றும் தேர்வு தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டுக்கான இளநிலை நீட் தேர்வுக்கான neet.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இணையதளம் வாயிலாகத்தான் மாணவர்கள் விண்ணப்பிக்கும் வசதி மேற்கொள்ளப்படும். முக்கியமான ஆவணங்கள் இந்த இணையதளத்திலேயே பதிவேற்றம் செய்யப்படும். தேர்வு தொடர்பான அனைத்துத் தகவல்களுக்கும் இந்த இணையதளத்தை அணுக வேண்டும். நீட் மாணவர்கள் தேசிய மருத்துவ ஆணையத்தின் இளநிலை மருத்துவ கல்வி வாரியத்தால் இறுதி செய்யப்பட்ட 2025ஆம் ஆண்டு நீட் தேர்வுக்கான பாடத்திட்டங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

குறிப்பாக இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியியல் பாடத்திட்டங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த பாடத்திட்டங்களை மாணவர்கள் பார்வையிடுவதற்காக தேசிய மருத்துவ ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. தேர்வுக்காக தயாராகும் மாணவர்கள் இந்த பாடத்திட்டத்தை பதிவிறக்கம் செய்யலாம். 2025ஆம் ஆண்டின் இளநிலை நீட் தேர்வினை நாடு முழுவதும் 25 லட்சம் மாணவர்கள் எழுதுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2024 ஆம் கல்வியாண்டிற்கான நீட் தேர்வினை நாடு முழவதும் 24 லட்சம் பேர் எழுதினர். அவர்களில் 13 லட்சத்து 16 ஆயிரத்து 268 பேர் தகுதி பெற்றனர்.

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததாகவும், நீட் தேர்வில் மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதும் பெரும் சர்ச்சை எழுந்தது. எனவே இந்த ஆண்டு சர்ச்சைகளுக்கு இடமின்றி தேர்வு நடத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த ஆண்டு முதல் தேர்விற்கான விண்ணப்ப பதிவில் APAAR ID மூலம் பதிவு செய்யும் முறை அமலுக்கு வருகிறது. மேலும், ஆதார் எண்ணை கொண்டு பதிவு செய்யும் ஊக்குவிக்கப்படுகின்றனர். தவறுகளை தவிற்கும் விதமாகவும், விண்ணப்பப் பதிவை எளிதாகவும், முறைகேடுகளை தடுக்கும் வகையிலும், ஆதார் எண் கொண்டு விண்ணப்பத்தை பதிவு செய்ய மாணவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

APAAR என்பதற்கு Automated Permanent Academic Account Registry அதாவது தானியங்கு நிரந்தர கல்வி கணக்கு பதிவு என்று அர்த்தம். இதன் மூலம் மாணவர்கள் பள்ளி முதல் கல்லூரியில் உயர்கல்வி வரை உள்ள மதிப்பெண்கள், சான்றிதழ்கள், சாதனைகள், முக்கியமாக கல்லூரி படிப்பில் பெறும் கிரெடிட் ஆகிய தரவுகள் டிஜிட்டல் முறையில் சேகரிக்கப்படும். ஓ.எம்.ஆர் ஷீட் முறை 2025 ஆம் ஆண்டிற்கான NEET-UG நுழைவுத் தேர்வு பேனா மற்றும் பேப்பர் முறையில் நடத்தப்படுமா அல்லது கணினி அடிப்படையிலான தேர்வாக (CBT) நடத்தப்படுமா என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை என்று கல்வி மற்றும் சுகாதார அமைச்சகங்கள் கடந்த மாதம் கூறிய நிலையில், இதுதொடர்பான ஆலோசனை நடத்தப்பட்டது. இந்நிலையில், தேசிய தேர்வு முகமை (NTA) இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான நீர் தேர்வை பேனா மற்றும் பேப்பர் முறையில் ஓ.எம்.ஆர் ஷீட் அடிப்படையில் நடத்தும் என்றும், தேர்வு ஒரே நாளில் மற்றும் ஒரே ஷிப்டில் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.