சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களை ஆண் போலீஸாரை இழுத்துச் சென்று, அப்புறப்படுத்தியதாக சர்ச்சை எழுந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் நவம்பர் மாத இறுதியில் பெஞ்சல் புயலால் கனமழை பெய்தது. அப்போது, இருவேல்பட்டு உள்ளிட்ட 18 கிராம மக்கள் தங்களுக்கு நிவாரண உதவி வழங்கவில்லை என்று கூறி, டிச. 3-ம் தேதி திருச்சி-சென்னை நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணி, ஆட்சியர் பழனி, எஸ்.பி. ஜெயகுமார் ஆகியோர் சென்றனர். அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அமைச்சர் உள்ளிட்டோர் மீது சேற்றை வாரி வீசினர்.
இது தொடர்பாக பாஜக நிர்வாகி விஜயராணி, அதே பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் ஆகியோர் மீது திருவெண்ணெய்நல்லூர் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். முன்ஜாமீன் கேட்டு விஜயராணி தாக்கல் செய்த மனுவை, சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், விஜயராணி மற்றும் ராமகிருஷ்ணனின் உறவினர்களை இரவு நேரங்களில் போலீஸார் தொந்தரவு செய்வதாகவும், அவர்களது குடும்பத்தினரை மிரட்டுவதாகவும் கூறி இருவரின் உறவினர்களும் கடந்த 13-ம் தேதி அரசூர் கூட்டு சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த போலீஸார், மறியலில் ஈடுபட்ட பெண்களை இழுத்துச் சென்றனர். பெண் காவலர்கள் இல்லாமல், சாலை மறியலில் ஈடுபட்டட பெண்களை போலீஸார் இழுத்துச் சென்ற சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பாஜக, பாமக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன
இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட போலீஸார் கூறும்போது, “பொங்கலையொட்டி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து அதிகமாக இருந்தது. அரசூர் கூட்டுச்சாலையில் சாலை மறியல் போராட்டத்தை முன்னின்று நடத்திய கதிரவனை போலீஸார் அப்புறப்படுத்த முயன்றபோது, அவரது தாயார் அன்பரசி உள்ளிட்டோர் போலீஸாரை தடுத்தனர். இதனால் போலீஸார் அவர்களை அகற்றிவிட்டு, சாலை மறியலைக் கைவிடச் செய்து, போக்குவரத்தை சீரமைத்தனர்.
பொங்கல் திருநாளையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளில் அனைத்து போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு இருந்ததால், சாலை மறியல் நடந்த இடத்துக்கு பெண் போலீஸார் உடனடியாகச் செல்லவில்லை. எனினும், பெண் போலீஸார் வரவழைக்கப்பட்டு, போராட்டத்தில் ஈடுபட்ட அன்பரசியை அப்புறப்படுத்தினர்.
போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த கதிரவன், அன்பரசியை போலீஸார் கைது செய்தனர். விஜயராணி, ராமகிருஷ்ணன் ஆகியோருடன் தொடர்பில் இருந்தவர்களை விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்தது உண்மைதான். ஆனால் சட்டத்தை மீறி எதுவும் நடைபெறவில்லை” என்றனர்.
இதற்கிடையே, உயர் நீதிமன்ற உத்தரவின்பேரில், தலைமறைவாக உள்ள பாஜக நிர்வாகி விஜயராணி மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர்.