யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு தொடர்ந்த வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

தமிழக போலீஸ் அதிகாரிகளையும், பெண் போலீசாரையும் அவதூறாக பேசியதாக பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மீது தொடரப்பட்ட வழக்கில், சவுக்கு சங்கரின் பேட்டியை ஒளிபரப்பிய யூ-டியூப் சேனலின் தலைமை நிர்வாகி பெலிக்ஸ் ஜெரால்டு கடந்த ஆண்டு மே 10-ந்தேதி கைது செய்யப்பட்டார். இந்த கைதில் மனித உரிமை மீறல் நடந்ததாக ஃபெலிக்ஸ் ஜெரால்டு வழக்கு தொடர்ந்துள்ளார். இதற்கு பதில் அளிக்குமாறு தமிழக போலீசாருக்கு கோர்ட் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரல், மே மாதவாக்கில் தனியார் யூடியூப் சேனலில் நேர்காணல் நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பானது. அதில் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர், பெண் போலீசார் குறித்து அவதூறாக பேசியதாக புகார் எழுந்தது. இதையடுத்த சவுக்கு சங்கர் மீது கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தேனியில் தங்கியிருந்த அவரை கடந்த ஆண்டு மே மாதம் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதனிடையே அதே சம்பவத்திற்காக திருச்சி மாவட்டம் முசிறி போலீஸ் டிஎஸ்பி யாஸ்மின் கொடுத்த புகாரின் பேரில், திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் சவுக்கு சங்கர் மற்றும் அவருடைய பேட்டியை ஒளிபரப்பிய தனியார் யூடியூப் சேனலின் தலைமை செய்தி ஆசிரியர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் 10-க்கும் மேற்பட்ட போலீசார் சவுக்கு சங்கர் மீது புகார் கொடுத்தனர். இதையடுத்து சவுக்கு சங்கர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்கு பதிவானது.

இதனிடையே பெண் போலீஸாரை அவதூறாகப் பேசிய சவுக்கு சங்கர் பேட்டியை ஒளிபரப்பிய யூடியூபரான பெலிக்ஸ் ஜெரால்டு டெல்லி அருகே தனியார் தங்கும் விடுதியில் தங்கியிருந்தார். அவரை திருச்சி தனிப்படை ஆய்வாளர் வீரமணி தலைமையிலான காவல்துறையினர் கடந்த ஆண்டு மே மாதம் கைது செய்து செய்து தமிழகம் அழைத்து வந்து சிறையில் அடைத்தனர். கிட்டத்தட்ட 80 நாட்களாக சிறையில் அடைக்கப்பட்ட ஃபெலிக்ஸ் ஜெரால்டு ஜாமீன் கேட்டு முறையீடு செய்தார். கீழமை நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களில் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்ட்டது. இரண்டாவது முறையாக தாக்கல் செய்த மனுவை ஏற்று சென்னை உயர்நீதிமன்றம் ஃபெலிக்ஸ் ஜெரால்டுக்கு நிபந்தனை ஜாமீன் அளித்தது. ஜாமீனில் விடுவிக்கப்பட்ட ஃபெலிக்ஸ் ஜெரால்டு, தனது யூடியூப் சேனலுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக மேல்முறையீடு செய்தார். இதில் அவரது யூடியூப் சேனலுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது.

இந்நிலையில் ஃபெலிக்ஸ் ஜெரால்டு தன்னை கைது செய்த தமிழக போலீசாருக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஃபெலிக்ஸ் ஜெரால்டு தனது மனுவில், கைதில் விதிமுறைகளை தமிழ்நாடு போலீஸ் மீறியுள்ளது என்றும், துன்பப்பட்டதற்காக, மதிப்பை கெடுத்தமைக்கும், அவமானப்படுத்தியற்கும் இழப்பீடாக ரூ.1 கோடி வழங்க தமிழ்நாடு போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இந்த மனுவை டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி மன்மீத் பிரீத்தம் சிங் விசாரித்தார். மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஹரிப்பிரியா பத்மநாபன் வாதங்களை ஏற்று, பெலிக்ஸ் ஜெரால்டின் மனுவுக்கு பதில் அளிக்க தமிழக போலீசாருக்கு உத்தரவிட்டார். மேலும் டெல்லி அசோக் நகர் காவல் நிலையத்தையும் எதிர்தரப்பாக சேர்க்கவும் அனுமதி அளித்து விசாரணையை ஏப்ரல் 28-ந் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி மன்மீத் பிரீத்தம் சிங் உத்தரவிட்டார்.