எம்ஜிஆரின் 108வது பிறந்தநாளையொட்டி கட்சியின் தலைமையில் அலுவலகத்தில் உள்ள அவரது சிலைக்கு எடப்பாடி பழனிசாமி இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதிமுக நிறுவன தலைவர் எம்ஜிஆர் 108வது பிறந்த நாளையொட்டி இன்று காலை சென்னை, ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலை, தலைமை கழக வளாகத்தில் அமைந்துள்ள எம்ஜிஆர் திருவுருவச் சிலைக்கும், ஜெயலலிதா சிலைக்கும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அந்த வளாகத்தில் அதிமுக கட்சி கொடியினை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார். அதனைத் தொடர்ந்து, தலைமை கழக செயலாளர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதைத்தொடர்ந்து 108 கிலோ எடை கொண்ட கேக் வெட்டி கட்சி நிர்வாகிகளுக்கு எடப்பாடி ஊட்டினார்.
இந்த நிகழ்ச்சியில், அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், மாவட்ட செயலாளர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், சார்பு அமைப்புகளின் மாநில நிர்வாகிகளும், மாவட்ட கழக நிர்வாகிகள், எம்.ஜி.ஆர். மன்றம், ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம் உட்பட கட்சியின் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளும், கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், தொண்டர்களும் கலந்துகொண்டனர்.
முன்னதாக, எம்ஜிஆரின் 108வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை, கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள திருவுருவ படத்திற்கு அமைச்சர்கள் ரகுபதி, தா.மோ.அன்பரசன், பி.கே.சேகர்பாபு, எஸ்.எம்.நாசர், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் கே.நாராயணசாமி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குநர் வைத்திநாதன், கூடுதல் இயக்குநர்கள் அன்புச்சோழன், செல்வராஜ் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.