பொங்கல் தொகுப்புடன் ரூ.2000: மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்த உயர் நீதிமன்றம்!

நடந்து முடிந்த பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழக அரசு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கியது. இந்த பரிசு தொகுப்புடன் 2000 ரூபாய் ரொக்க பணம் வழங்கக் கோரி பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் மோகன்தாஸ், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது.

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் குடும்ப அட்டை தாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. ரேஷன் கடைகள் மூலம் இதற்கான டோக்கன் கடந்த ஜனவரி 3 ஆம் தேதி முதல் வழங்கப்பட்டது. ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் வீடு வீடாக டோக்கன் விநியோகம் செய்யப்பட்டது. பொங்கல் பரிசு தொகுப்பை பெறுவதற்கான நாள், நேரம் ஆகிய விவரங்கள் டோக்கனில் இடம்பெற்றிருந்தன. அதைத்தொடர்ந்து, ஜனவரி 9 ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது.

பொங்கல் பரிசுத் தொகுப்போடு, ரொக்கப் பணமும் வழங்கப்படும் என மக்கள் எதிர்பார்த்த நிலையில், ரொக்கப் பணம் வழங்கப்படாது எனத் தெரிவித்து விட்டது தமிழக அரசு. எதிர்க்கட்சிகள், பொங்கல் பரிசாக மக்களுக்கு ரூபாய் 2000 வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தன. ஆனால், தமிழக அரசு இந்த ஆண்டு நிதி நெருக்கடி காரணமாக ரொக்கப் பணம் வழங்க முடியவில்லை என விளக்கம் அளித்தது.

இந்நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.2,000 வழங்க வேண்டும் என பாஜக வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் கடந்த ஆண்டு போல இந்த ஆண்டும் பொங்கல் திருநாளை ஏழை எளிய மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாட அனைத்து ரேஷன் கார்டு அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு பொருட்களோடு ரூபாய் 2000 வழங்க கோரி பாஜக வழக்கறிஞர் ஏற்காடு ஏ மோகன் தாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். கடந்த வருடங்களைப் போலவே இந்த ஆண்டும் தமிழக மக்கள் பெரும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, தங்களது உடைமைகளையும் பொருளாதாரத்தையும், வாழ்வாதாரத்தையும் இழந்து, விவசாய பயிர்கள் முற்றிலுமாக நாசமாகி, அனைத்து தரப்பு மக்களும், மிகப்பெரிய சோகத்தில் உள்ளதால், பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாட, தமிழக அரசு இந்த ஆண்டும் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் தலா ரூபாய் 2000 வழங்க கோரி பாஜக வழக்கறிஞர் ஏற்காடு மோகன்தாஸ் சார்பில் வழக்கறிஞர் ஜி எஸ் மணி ஒரு பொதுநல மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். பொங்கல் பண்டிகைக்கு முன்பாக இந்த வழக்கை அவசர வழக்காக விசாரித்து, தகுந்த நிவாரணம் அளிக்க உத்தரவிட வேண்டும் என அண்மையில் தலைமை நீதிபதி அமர்வில் முறையிடப்பட்டது. ஆனால், தலைமை நீதிபதி ஸ்ரீராம், அவசர வழக்காக விசாரிக்க மறுத்தார்.

இந்நிலையில், இந்த வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டும் என நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் லட்சுமிநாராயணன் அமர்வில் வழக்கறிஞர் மோகன்தாஸ் இன்று முறையிட்டார். இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், பொங்கல் பரிசு தொகுப்புடன் ஏழை மக்களுக்கு ரொக்க பணம் வழங்கினால் மகிழ்ச்சி தான். ஆனால், இது முழுக்க முழுக்க அரசின் கொள்கை முடிவு என்றும், ரொக்கப் பணம் ரூ. 2000 வழங்கும்படி அரசுக்கு உத்தரவிட முடியாது எனவும் கூறி, வழக்கை விசாரணைக்கு எடுக்க மறுத்து விட்டனர்.