அரவிந்த் கெஜ்ரிவால் கார் மீது கல்வீச்சு: பாஜக வேட்பாளர் மீது புகார்!

டெல்லி சட்டமன்றத் தேர்தலின் போது ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கார் மீது கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் பர்வேஷ் வர்மாவின் ஆதரவாளர்கள் கெஜ்ரிவால் கார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி புகார் கூறியுள்ள நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலின் கார் ஏறியதில் பாஜக தொண்டரின் கால் உடைந்ததாக பாஜக புகார் அளித்துள்ளது.

இந்தியாவின் தலைநகரான டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதன் பதவிக் காலம் பிப்ரவரி மாதத்துடன் நிறைவடையும் நிலையில், 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டசபைக்கு ஒரே கட்டமாக பிப்.5ஆம் தேதி தேர்தல் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இதன்பின் பிப்.8ஆம் தேதி பதிவான வாக்குகளை எண்ணி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது.

இந்த நிலையில் டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி, பாஜக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தனித்தனியாக போட்டியிடுவதால் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 3 கட்சிகளும் தீவிர பரப்புரையில் இயங்கி வருகின்றனர். ஏற்கனவே தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டிருந்த நிலையில், தற்போது தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சட்டமன்றத் தேர்தலில் புது டெல்லி தொகுதியில் அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி தரப்பில் முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீக்சித் மகன் சந்தீப் தீக்சித்தும், பாஜக தரப்பில் முன்னாள் எம்பி பர்வேஷ் வர்மாவும் போட்டியிடுகின்றனர்.

இந்த நிலையில் புது டெல்லி தொகுதியில் அரவிந்த் கெஜ்ரிவால் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது திடீரென அரவிந்த் கெஜ்ரிவாலின் கார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. அப்போது அவரை பாதுகாப்பு அதிகாரிகள் காரில் ஏற்றி அனுப்பி வைக்க முயற்சித்த போது, ஒரு கல் காரின் மேற்கூரையில் வந்து விழுந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக ஆம் ஆத்மி கட்சி தனது எக்ஸ் பக்கத்தில், பாஜக வேட்பாளர் பர்வேஷ் வர்மாவின் அடியாட்கள் தேர்தல் பரப்புரையின் போது அரவிந்த் கெஜ்ரிவால் மீது தாக்குதல் நடத்தி இருக்கின்றனர். பாஜக தொண்டர்களே, அரவிந்த் கெஜ்ரிவால் இதுபோன்ற தாக்குதல்களுக்கு அஞ்சுபவர் அல்ல. இதற்கு டெல்லி மக்கள் உங்களுக்கு சரியான பதிலடியை கொடுப்பார்கள் என்று பதிவிடப்பட்டுள்ளது.

இதனிடையே அரவிந்த் கெஜ்ரிவால் மீது தாக்குதல் நடந்த வீடியோவில், அவரின் கான்வாய் அருகிலேயே கருப்பு கொடியுடன் சிலர் வேண்டுமென்றே பரப்புரையை கெடுக்க முயற்சித்தது தெரிய வந்துள்ளது. இந்த வீடியோவை வெளியிட்டு ஆம் ஆத்மி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட சில நிமிடங்களிலேயே பாஜக முன்னாள் எம்பி பர்வேஷ் வர்மா தனது எக்ஸ் பக்கத்தில், மக்கள் கேள்வி எழுப்பிய போது, அரவிந்த் கெஜ்ரிவால் தனது கார் மூலம் பாஜக தொண்டர்கள் இருவரின் கால்களில் ஏற்றி உடைத்துவிட்டார். அவர்கள் இருவரும் தற்போது லேடி ஹார்டிங் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர் என்று புகார் கூறியுள்ளார்.