பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு, மு.க.ஸ்டாலின் புரிந்து கொள்ள வேண்டும்: அன்புமணி!

ராணிப்பேட்டை மாவட்டம் திருமால்பூர் கிராமத்தைச் சேர்ந்த 2 இளைஞர்கள் மீது 6 பேர் பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்துக்கு விசிகவினரே காரணம் எனவும், தங்களுடைய பொறுமைக்கும் எல்லை இருக்கிறது இதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புரிந்து கொள்ள வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி காவல் எல்லைக்கு உட்பட்ட நெல்வாய் கிராமத்தை சேர்ந்தவர் தமிழரசன் இவர் தனியார் நிறுவனத்தின் டாடா ஏஸ் வாகன ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இதே பகுதியை சேர்ந்த ஓட்டுனர் விஜய கணபதியும் நண்பர்களாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று திருமால்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த தமிழரசன் மற்றும் விஜயகணபதி மீது மர்ம நபர்கள் திடீரென பெட்ரோல் குண்டு வடிவிலான பொருட்களை வீசி உள்ளனர். இதில் தீக்காயங்களுடன் அலறிய இருவரும் அருகில் இருந்த நீர் மற்றும் மணல் ஆகியவற்றில் விழுந்து தப்பித்துள்ளனர். அதற்குள் தமிழரசனுக்கு 60 சதவீதத்திற்கு மேல் தீக்காயங்களுடனும் விஜய கணபதிக்கு 30 சதவீத தீக்காயங்களுடனும் பாதிக்கப்பட்டனர். தகவல் அறிந்து அவரது உறவினர்கள் உடனடியாக மீட்டு காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

அவர்களை பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:-

ராணிப்பேட்டை மாவட்டம் நெல்வாய் கிராமத்தைச் சேர்ந்த 2 பாமக இளைஞர்களை விசிகவினர் கொடூரமான முறையில் பெட்ரோல் ஊற்றி கொளுத்தி இருக்கின்றார்கள். தமிழரசன் மற்றும் விஜய கணபதி என்ற நபர்கள் இதை செய்தவர்கள் அருகில் உள்ள திருமால்பூர் சேர்ந்த பிரேம் உள்ளிட்ட ஆறு ஏழு நபர்கள் இவர்கள் அனைவரும் விசிகவை சேர்ந்தவர்களும் அனுதாபிகளும். இது திடீரென்று நடந்த சம்பவம் கிடையாது கடந்த காலங்களில் அந்த பகுதியில் இது போன்ற பல சம்பவங்கள் நடைபெற்றிருக்கிறது. காவல்துறை கண்டுகொள்ளாமல் விட்டதால் இந்த அளவுக்கு துணிச்சல் வந்து எங்கள் கட்சியை சார்ந்த இரண்டு நபர்களை பெட்ரோல் ஊற்றி திட்டமேட்டு கொளுத்திய கொடூரமான செயலை தமிழ்நாட்டில் எல்லாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

இதற்கு முக்கிய காரணம் திருமால்பூர் மட்டுமல்ல சுற்றி இருக்கக்கூடிய கிராமங்களில் அதிக அளவில் கஞ்சா விற்று கொண்டிருக்கிறார்கள். காவல்துறைக்கு தெரிந்துதான் செய்து கொண்டிருக்கிறார்கள். ராணிப்பேட்டை மாவட்டம் மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதும் கஞ்சா மாநிலமாக மாறி இருக்கிறது. தனிப்பட்ட சம்பவம் கிடையாது என் கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களுக்கும் இது போன்ற கொலை வெறி தாக்குதல் கிண்டல் செய்வது அதிக அளவில் நடைபெற்ற வருகிறது. நாங்களும் எங்கள் கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களை அமைதிப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறோம். கடந்த காலம் போல் இருந்தால் வேறு விதமாக கலவரம் போல் மாறும். ஆனால் எங்கள் கட்சி நிர்வாகிகள் தொண்டர்களை தொடர்ந்து தொலைபேசி மூலமாக வலியுறுத்தி சொல்லியிருக்கிறோம்.

இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் முதலமைச்சர் பார்த்துக் கொள்ள வேண்டும். அவருக்கு கீழ் இயங்கிக் கொண்டிருக்கிற காவல்துறை மெத்தனமான போக்கே கள்ளச்சாராயம் கஞ்சா விற்பவர்களை ஆதரவு கொடுப்பது. பிரேம் என்கிற நபர் மீது ஐந்தாறு வழக்கு இருக்கிறது. கொலை வெறி தாக்குதல் உள்ளிட்ட வழக்குகள் அவன் மீது இருக்கிறது. தேடப்படும் குற்றவாளி அவன் ஆனால் காவல்துறையினர் அவனை அப்படியே கண்டு கொள்ளாமல் விட்டு விட்டார்கள். அவன் பெட்ரோல் ஊற்றி கொடுத்த மனநிலைக்கு வந்தது காரணமே தமிழக அரசும் காவல்துறையும். கூட்டணி கட்சி என்றால் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா ஓரளவிற்கு தான் பொறுத்துக் கொள்ள முடியும்.. எங்களுடைய பொறுமைக்கும் எல்லை இருக்கிறது. இதை முதலமைச்சர் புரிந்து கொள்ள வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஊரே கலவரம் ஆகி அதை வேறு விதமாக கொண்டு சென்றார்கள். அதை இன்னும் மறக்கவில்லை. தமிழினுடைய தந்தையும் மூன்றாண்டுகளுக்கு முன்பாக இது போன்ற தாக்கப்பட்டு இருக்கிறார்கள். என்ன சட்டம்ங்க தமிழ்நாட்டில் நடக்கிறது. முதலமைச்சர் எதற்கு காவல்துறை வைத்திருக்கிறார். அவரால் செயல்பட முடியவில்லையென்றால் காவல்துறையை வேறு யாரிடமாவது கொடுத்திடலாம். எங்கு பார்த்தாலும் கொலை நடக்கிறது. இனியாவது தடுத்து நிறுத்துகிற சூழலை தமிழகத்தில் ஏற்படுத்த வேண்டும் மக்களுக்கு ஒரு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில் விசிக தலைவர் திருமாவளவன், இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகேயுள்ள நெல்வாய் கிராமத்தில் நடந்த வன்முறைக்கும் விடுதலைச் சிறுத்தைகளுக்கும் எந்தவொரு தொடர்புமில்லை. பாமக நிறுவனரும், அதன் தலைவரும் இதனை வைத்து வட மாவட்டங்களில் சமூகப் பதற்றத்தை உருவாக்கிட முயற்சிப்பது அதிர்ச்சியளிக்கிறது. விசிகவுக்கு எதிராக பாமக பரப்பும் வதந்தியை நம்ப வேண்டாமென
பொது மக்களைக் கேட்டுக்கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.