தமிழ்நாட்டு எழுத்தாளர்கள் நோபல் பரிசை இலக்காகக் கொள்ள வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்!

தமிழ்நாட்டு எழுத்தாளர்கள் நோபல் பரிசை இலக்காகக் கொள்ள வேண்டும் என முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியுள்ளதாவது:-

சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா 2025 உலகைத் தமிழுக்கும், தமிழை உலகுக்கும் – இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத, தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் தனித்துவமான இந்த முன்னெடுப்பு புதிய மைல்கற்களை அடைந்துள்ளது.

2023-இல் 365 புரிந்துணர்வு ஒப்பந்தங்களுடன் தொடங்கி, 2024-இல் 752 என வளர்ந்து, தற்போது 2025-ஆம் ஆண்டில் 1125 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (தமிழில் இருந்து அயலக மொழிகளுக்கு 1005, அயலக மொழிகளில் இருந்து தமிழுக்கு 120) மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்தச் சாதனைக்கும், தமிழிலக்கியம் உலக அளவில் கவனம் பெறவும் நமது திராவிட மாடல் அரசின் மொழிபெயர்ப்பு நல்கையும் ஆதரவும்தான் காரணம் எனத் தமிழ் அறிவுலகம் பாராட்டுகிறது. ஞானபீடம் அல்ல, நம் எழுத்தாளர்கள் நோபல் பரிசே பெற உயர்வுள்ளுவோம்! இவ்வியத்தகு சாதனைக்காக அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கும் துறை அதிகாரிகளுக்கும் எனது பாராட்டுகள்! இவ்வாறு அவர் பதிவிடுள்ளார்.

இதனிடையே சென்னை, நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா – 2025 நிறைவு விழாவில், சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா தூதர் விருது, உலகளாவிய தொலைநோக்கு டிஜிட்டல் புத்தக கண்காட்சி சிறப்பு விருது, பண்டைய தமிழ் இலக்கிய மேம்பாட்டு விருது, நவீன தமிழ் இலக்கிய மேம்பாட்டு விருது, கூட்டு வெளியீட்டு கூட்டாண்மை விருது, பன்னாட்டு மானியக் குழுவின் சிறப்பு விருது, புத்தக ஊக்குவிப்பு விருது, உலகளாவிய இலக்கிய ஆதரவிற்கான விருது ஆகிய விருதுகளை விருதாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார்.