பெண்களுக்கு மரியாதை தரும் கட்சி திமுக: திவ்யா சத்யராஜ்!

நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

பிரபல நடிகர் சத்யராஜி்ன் மகள் திவ்யா, ஊட்டச்சத்து நிபுணராக உள்ளார். இவர், சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று காலை சந்தித்து, தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார். அவரை வரவேற்று, திமுக உறுப்பினர் அட்டையை முதல்வர் வழங்கினார். அப்போது, திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்பி, அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.கே.சேகர்பாபு ஆகியோர் உடன் இருந்தனர்.

திமுகவில் இணைந்தது பற்றி திவ்யா சத்யராஜ் கூறும்போது, ‘‘மக்கள் பணி செய்ய வேண்டும் என்பது எனது கனவு. திமுக, பெண்களுக்கு மரியாதை தரும் கட்சியாக உள்ளது. அதற்கு உதாரணம் புதுமைப்பெண் திட்டம். நான் ஊட்டச்சத்து நிபுணர். ஆரோக்கியத்துக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுப்பேன். திமுக ஆரோக்கியத்துக்கு மரியாதை தரும் கட்சியாக இருக்கிறது. அதற்கு உதாரணம்தான் பள்ளிகளில் காலை உணவு திட்டம். இது அனைத்தையும்விட எல்லா மதங்களுக்கும் மரியாதை தருகிற ஒரே கட்சியாக திமுக உள்ளது’’ என்றார்.