சமூக ஆர்வலர் ஜெகபர் அலி கொலை வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும்: பிரேமலதா!

கனிமவள கொள்ளையை எதிர்த்து குரல் கொடுத்த சமூக ஆர்வலர் ஜெகபர் அலி திட்டமிட்டு கொலை செய்யப்பட்டிருப்பதாகவும், இந்த வழக்கை சிபிஐ க்கு மாற்றி விசாரணை செய்ய வேண்டும் எனவும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே வெங்களூரை சேர்ந்த ஜெகபர் அலி கனிமவளக் கொள்ளைக்கு எதிராக போராடியவரை விபத்து ஏற்படுத்தி கொலை செய்த குவாரி உரிமையாளர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருசக்கர வாகனம் மீது 407 மினி லாரி மோதிய விபத்தில், அதிமுக முன்னாள் கவுன்சிலரும் சட்டவிரோத கல் குவாரிக்கு எதிராக வழக்குத் தொடர்ந்து போராடிய நபரான ஜெகபர் அலி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தொடர்ந்து கனிம வள கொள்ளை நடப்பதாக மாவட்ட நிர்வாகத்திற்கு ஆதாரங்களுடன் பல முறை மனு கொடுத்து வந்துள்ளார். இதன் காரணமாக கனிம வள கொள்ளையர்களால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வந்தார்.

இந்த விசாரணையில் ஜெகபர் அலி விபத்து ஏற்படுத்தி கொலை செய்யப்பட்டது தெரிய வந்ததால் குவாரி உரிமையாளர் உட்பட நான்கு பேரை திருமயம் போலீஸார் கைது செய்துள்ள நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர். குவாரி உரிமையாளர்ராக, அவரது மகன் சதீஷ் 407 மினி லாரி உரிமையாளர் முருகானந்தம், அவரது ஓட்டுநர் காசி உள்ளிட்ட நான்கு பேர் கைது மேலும் குவாரி உரிமையாளர் ராமையாவை போலீஸார் தேடி வருகின்றனர்.

தொடர்ந்து திமுக ஆட்சியில் இது போன்ற கொலைகள் நடப்பது சர்வசாதாரணமாகவிட்டது. சமூக ஆர்வலராக ஒருவர் கனிமவள கொள்ளை நடப்பதை எதிர்த்து வழக்கு பதிவு செய்யாததால் அவர் திட்டமிட்டு லாரி ஏற்றி கொலை செய்த உண்மை நிலை விசாரணையில் வெளியே வந்துள்ளது. இது மிகவும் கண்டனத்திற்குரியது. இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி விசாரணை செய்ய வேண்டும்.

இனி இதுபோன்ற கொலைகள் எங்கும் நடக்காத வண்ணம் இரும்புகரம் கொண்டு இந்த அரசு அடக்க வேண்டும். உண்மைக்காக குரல் கொடுத்த ஒருவரை கொலை செய்தது எந்த விதத்தில் தியாயம்? இதுதான் திராவிட மாடல் ஆட்சியா என்ற மக்களின் கேள்விக்கு இந்த பதில் தர வேண்டும். கொலை செய்தவர்கள் யாராக இருந்தாலும் உட்சபட்ச தண்டனையான மரண தண்டனை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.