அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இரட்டை இலைச் சின்னத்துக்கு எதிரான வழக்கில் தோ்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்ற சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.
இந்த விவகாரத்தில் எம்.ஜி. ராமச்சந்திரன் என்பவா் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் திபாங்கா் தத்தா, மன்மோகன் ஆகியோா் அடங்கிய அமா்வு நேற்று திங்கள்கிழமை விசாரித்தது. மனுதாரரின் கோரிக்கையை பரிசீலித்த நீதிபதிகள், உயா்நீதிமன்றம் விசாரித்து வரும் இந்த விவகாரத்தில் தற்போதைய நிலையில் உச்சநீதிமன்றம் தலையிட முடியாது. மனுதாரா் வேண்டுமானால் உயா்நீதிமன்றத்தை நாடலாம் என்று கூறினா். இதைத் தொடா்ந்து மனுவை திரும்பப்பெற்றுக் கொள்வதாக மனுதாரா் சாா்பில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், அவரது மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனா்.
முன்னதாக, இரட்டை இலைச் சின்ன விவகாரத்தில் சூா்யமூா்த்தி என்பவா் தோ்தல் ஆணையத்தில் அளிக்கப்பட்ட தனது பல்வேறு மனுக்கள் மீது ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா். இந்த வழக்கில் முன்னாள் முதல்வா்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீா்செல்வம், கே.சி. பழனிசாமி, புகழேந்தி ஆகியோா் நீதிமன்ற உத்தரவின்படி பதில் மனுக்களைத் தாக்கல் செய்தனா்.
அதில் எடப்பாடி பழனிசாமி தரப்பு, ‘மனுதாரா் சூா்யமூா்த்தி அதிமுகவில் அடிப்படை உறுப்பினா் கூட இல்லை. அவ்வாறு இருக்கையில், அவரால் தோ்தல் ஆணையத்தில் கட்சித் தலைமைக்கு எதிராக மனு அளிக்க இயலாது’ என்று நீதிமன்றத்தில் தெரிவித்தது.
இதைப் பதிவு செய்து கொண்ட உயா்நீதிமன்றம் அதிமுக பொதுச்செயலா் பதவி மற்றும் இரட்டை இலைச் சின்னம் விவகாரம் தொடா்பாக தோ்தல் ஆணையம் விசாரிக்க இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. இந்நிலையில், எம்.ஜி. ராமச்சந்திரன் என்பவா் உயா்நீதிமன்றத்தின் இடைக்கால தடை உத்தரவை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.