புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவிக்கு நீதி கோரி புதுச்சேரி சட்டப்பேரவையை முற்றுகையிட்டு மகிளா காங்கிரஸார் போராட்டம் நடத்தினர். அப்போது போலீஸாருடன் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு நடந்தது.
புதுவை காலாப்பட்டு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் மாணவியிடம் அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் அத்துமீறினர். இது தொடர்பாக காலாப்பட்டு போலீஸார் வழக்குப்பதிந்து 2 சிறுவர்கள் உட்பட 4 பேரை கைது செய்துள்ளனர். மாணவியிடம் ஏன் புகார் பெறவில்லை என அரசியல் கட்சியினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று பல்கலைக்கழக மாணவிக்கு நியாயம் கேட்டு, சட்டப்பேரவை முற்றுகை போராட்டம் நடத்த மகிளா காங்கிரஸார் முடிவு எடுத்தனர். இதற்காக ஆம்பூர் சாலை அருகே துணைத் தலைவர் நிஷா தலைமையில் மகிளா காங்கிரஸார் கூடினர். அங்கு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி, முன்னாள் முதல்வர் நாராயணசாமி, சட்டப்பேரவை கட்சித் தலைவர் வைத்தியநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மகிளா காங்கிரஸார் திடீரென அங்கிருந்து ஊர்வலமாக சட்டப்பேரவை நோக்கி வந்தனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. சட்டப்பேரவை பாதுகாவலர்கள் நுழைவுவாயிலை மூடினர். அப்போது அங்கு வந்த மகளிர் காங்கிரஸார், முதல்வரிடம் மனு அளிக்க வந்துள்ளதாக கூறினர். அவர்களை பாதுகாவலர்கள் அனுமதிக்க மறுத்ததால், நுழைவுவாயில் முன்பு தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இன்னும் சிலர் கேட்டை தள்ளியும், அதன்மீது ஏறியும் குதிக்க முயன்றனர்.
தகவலறிந்த பெரியகடை போலீஸார் பெண் காவலர்களுடன் அங்கு குவிந்தனர். மகளிர் காங்கிரஸார் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து போலீஸார் அவர்களை அங்கிருந்து போலீஸ் வேனில் ஏற்றினர். முக்கிய நிர்வாகிகள் 10 பேரை மட்டும் முதல்வரை சந்திக்க போலீஸார் அனுமதித்தனர். இதனால் சட்டப்பேரவை முன்பாக பதற்றம் ஏற்பட்டது.