குடியரசுத் தலைவர் முர்முவுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் சந்திப்பு!

தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று(ஜன. 22) குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்துப் பேசினார்.

மணப்பாறையில் ஜன. 28 முதல் பிப். 3-ஆம் தேதி வரை பாரத சாரண சாரணியர் இயக்க வைர விழா நடைபெற உள்ள நிலையில், அதற்கு வருகை தர அழைப்பு விடுப்பதன் நிமித்தமாகவும் மரியாதை நிமித்தமாகவும் குடியரசுத் தலைவரை சந்தித்துப் பேசினார். அப்போது பாரத சாரண சாரணியர் இயக்க அதிகாரிகளும் உடனிருந்தனர்.

இது குறித்து அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், ‘குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை இன்று புதுதில்லியில் சந்தித்து, தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படி, திருச்சி மாவட்டம் மணப்பாறையில் வருகிற ஜனவரி 28 முதல் பிப்ரவரி 3 வரை நடைபெறவிருக்கும் பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் வைர விழா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு பெருந்திரளணி குறித்த தகவல்களை தெரிவித்து, தற்போது நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகளின் நிலை குறித்தும் எடுத்துரைத்தோம்’ என்று பதிவிட்டுள்ளார்.