‘மகள்களைக் காப்போம்; மகள்களைப் படிக்க வைப்போம்’ எனும் மத்திய அரசின் முயற்சி, பாலின சார்புகளை முறியடிப்பதில் முக்கிய பங்கு வகித்துள்ளதாகவும், அனைத்து தரப்பு மக்களின் பங்களிப்பையும் ஈர்த்துள்ளதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
‘மகள்களைக் காப்போம்; மகள்களைப் படிக்க வைப்போம்’ (Beti Bachao Beti Padhao) இயக்கம் தொடங்கப்பட்டு இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவுகளில் கூறியுள்ளதாவது:-
‘மகள்களைக் காப்போம்; மகள்களைப் படிக்க வைப்போம்’ இயக்கம் 10 ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில், இது ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும், மக்கள் இயக்க முயற்சியாக மாறியுள்ளது. அதோடு, அனைத்து தரப்பு மக்களின் பங்கேற்பையும் ஈர்த்துள்ளது.
‘மகள்களைக் காப்போம்; மகள்களைப் படிக்க வைப்போம்’ முயற்சி, பாலின சார்புகளை முறியடிப்பதில் முக்கிய பங்கு வகித்துள்ளது. அதே நேரத்தில் பெண் குழந்தை கல்வி பெறுவதற்கும், அவர்கள் தங்களின் கனவுகளை அடைவதற்கு வாய்ப்புகள் வழங்கப்படுவதை உறுதி செய்வதற்கான சரியான சூழலை உருவாக்கியுள்ளது. இதற்காக அர்ப்பணிப்புடன் முயற்சிகளை மேற்கொண்ட பொதுமக்களுக்கும், பல்வேறு சமூக சேவை அமைப்புகளுக்கும் நன்றி. ‘மகள்களைக் காப்போம்; மகள்களைப் படிக்க வைப்போம்’ இயக்கம், குறிப்பிடத்தக்க மைல்கற்களை அடைந்துள்ளது. நீண்ட பல ஆண்டுகளாக குறைவான பெண் குழந்தை விகிதங்களைக் கொண்ட மாவட்டங்கள், குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைப் பதிவு செய்துள்ளன. மேலும், பாலின சமத்துவத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிய ஆழமான உணர்வை விழிப்புணர்வு பிரச்சாரங்கள் விதைத்துள்ளன.
இந்த இயக்கத்தை அடிமட்ட மட்டத்தில் துடிப்பானதாக மாற்றிய அனைத்து தரப்பினரையும் நான் பாராட்டுகிறேன். நமது மகள்களின் உரிமைகளைப் பாதுகாப்பதைத் தொடர்ந்து, அவர்களின் கல்வியை உறுதிசெய்து, அவர்கள் எந்த பாகுபாடும் இல்லாமல் செழிக்கக்கூடிய ஒரு சமூகத்தை உருவாக்குவோம். வரும் ஆண்டுகள் இந்தியாவின் மகள்களுக்கு இன்னும் பெரிய முன்னேற்றத்தையும் வாய்ப்பையும் கொண்டு வருவதை ஒன்றாக உறுதி செய்வோம். இவ்வாறு பிரதமர் கூறியுள்ளார்.