குளிருக்காக அறைக்குள் தீமூட்டி விட்டு உறங்கிய, தமிழ்நாட்டைச் சேர்ந்த இருவர் உட்பட மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்தியாவில் இருந்து பல ஆயிரம் பேர் வெளிநாடுகளுக்குச் சென்று வேலை செய்து வருகிறார்கள். குறிப்பாகத் தென்னிந்திய மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பேர் மத்திய கிழக்கு நாடுகளில் வேலை செய்து வருகிறார்கள். மத்திய கிழக்கு நாடுகளில் பொதுவாக இந்தியத் தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பான சூழலே நிலவும் என்ற போதிலும் சில நேரம் மோசமான சம்பவங்கள் நடந்துவிடுகிறது. அப்படியொரு மோசமான சம்பவம் தான் இப்போது குவைத் நாட்டில் நடந்துள்ளது. இதில் இரு தமிழர்கள் உட்பட மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கடலூர் மங்கலம்பேட்டை சேர்ந்தவர் 2 பேரும், கொல்கத்தாவைச் சேர்ந்த ஒருவரும் குவைத் நாட்டில் ஓட்டுநர்களாக பணிபுரிந்து வந்துள்ளனர். உரிமையாளர்கள் அளித்த அறையிலேயே இவர்கள் தங்கி வந்துள்ளனர். குவைத்தில் இப்போது மிகக் கடுமையான குளிர் நிலவுகிறது. சிலநேரங்களில் 5, 6 டிகிரி வரை கூட வெப்பம் குறையும். அப்படி தான் நேற்று முன்தினம் இரவு வெப்பம் 5 டிகிரி வரை குறைந்துள்ளது. இதனால் அவர்கள் அறைக்கு வெளியே தீ மூட்டிக் குளிர் காய்ந்துள்ளனர். குளிர் அதிகமாக இருந்ததால் தீயை அப்படியே அறைக்கு உள்ளேயும் எடுத்து வந்துவிட்டனர். கொஞ்ச நேரம் பேசிக்கொண்டு இருந்த அவர்கள் அப்படியே தங்களை அறியாமல் தூங்கிவிட்டனர். முதலில் 3 பேர் குளிர் காய்ந்த நிலையில், கொஞ்ச நேரத்தில் 4வது நபரும் அங்கே வந்து தூங்கிவிட்டார்.
உள்ளேயே தீ எரிந்து கொண்டு இருந்ததால் அறையில் இருந்த ஆக்சிஜன் குறையத் தொடங்கியுள்ளது. குளிர் காரணமாகக் கதவு, ஜன்னல் என அனைத்தும் மூடப்பட்டு இருந்ததால் வெளிக்காற்றும் உள்ளே வரவில்லை. இதனால் அறையில் உள்ள ஆக்சிஜன் அளவு குறைந்து, மெல்ல மூச்சு திணறி மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் மட்டும் உயிருக்குப் போராடிக் கொண்டு இருந்த நிலையில், அவர் அருகே உள்ள மருத்துவமனைக்கு ஹெலிகாப்டரில் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. உயிரிழந்த நபர்கள் கடலூர் மங்கலம்பேட்டையை சேர்ந்த முகமது யாசின் (வயது 27), முகமது ஜுனைத் (வயது 28) மற்றும் கொல்கத்தாவைச் சேர்ந்த நபர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அறைக்குக் கடைசியாக வந்த 4ஆவது நபர் மட்டும் உயிர் பிழைத்ததாகவும் அவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து இந்தியத் தூதரகம் சார்பில் உயிரிழந்தோர் குறித்த தகவல்கள் பெறப்பட்டுள்ளது.
இதற்கிடையே குவைத்தில் உயிரிழந்தோரின் உடலை இந்தியாவிற்கு கொண்டு வர மத்திய மாநில அரசுகள் உதவ வேண்டும் என அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குவைத்தில் வேலைக்குச் சென்ற இடத்தில் இரு தமிழர்கள் உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.