செருப்பு, துடைப்பத்தால் சீமான் படத்தை ஆவேசமாக அடித்த பெண்கள்!

பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சீமானை கண்டித்து அவரது வீட்டை முற்றுகையிட்டுள்ளனர் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள், ஆவேசமாக சீமானின் உருவப் படத்தை செருப்பு மற்றும் துடைப்பத்தால் அடித்து கொந்தளித்துள்ளனர்.

தந்தை பெரியாரை தொடர்ந்து இழிவுபடுத்தி பேசி வரும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டை இன்று பெரியாரிய ஆதரவு அமைப்புகள் முற்றுகையிடுவதாக அறிவித்தன. சென்னை நீலாங்கரையில் முற்றுகையிடும் போராட்டக்காரர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்க சீமான் வீடு முன்பாக ஏராளமான நாம் தமிழர் கட்சியினர் இரவு முதலே குவிந்தனர். மேலும் அப்பகுதியில் 200-க்கும் அதிகமான போலீசாரும் குவிக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது.

இந்த நிலையில் தந்தை பெரியாரை இழிவுபடுத்துகிற சீமான் வீடு இன்று முற்றுகையிடப்படும் என தந்தை பெரியார் திராவிடர் கழகம், மே 17 இயக்கம், திராவிடர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு அறிவித்து, இன்று நீலாங்கரையில் உள்ள சீமான் வீடு அருகே திரண்டனர். இந்நிலையில், சீமான் வீட்டு முன்பாக நாம் தமிழர் கட்சியினர் மகளிர் அணியினர் கையில் உருட்டு கட்டைகளுடன் திரண்டனர். சீமானின் வீட்டை முற்றுகையிட வந்தால் வெட்டுவோம் என பகிரங்க மிரட்டல் விடுத்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், சீமான் வீடு முன்பாக சீமான் கார்ட்டூன் பதாகைகளுடன் திரண்ட பெரியார் ஆதரவு கூட்டமைப்பைச் சேர்ந்த பெண்கள், சீமான் படத்தை துடைப்பம், செருப்புகளால் அடித்து எதிர்ப்பு தெரிவித்தனர். பெண் ஒருவர் சீமான் படத்தை துடைப்பத்தால் ஆவேசமாக அடித்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், சாலையில் அமர்ந்து, சீமான் படத்தை கீழே வைத்து செருப்பால் அடித்ததோடு, ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தினர். அப்போது, பெரியார் குறித்து அவதூறாகப் பேசியதாக சீமானை கண்டித்து முழக்கமிட்டனர்.