விமர்சிப்பதற்கு ஒரு யோக்கியதை வேண்டும்: ஆர்.எஸ்.பாரதி!

நாடகமாடுவதிலேயே திமுகவினர் கைதேந்தவர்கள் என்று பேசிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதிலடி கொடுத்துள்ளார். கருணாநிதி எழுதிய வசனத்திற்கு டைரக்‌ஷன் செய்தவர் தான் எஸ்.ஏ.சந்திரசேகர் என்று கூறிய அவர், விமர்சிப்பதற்கு ஒரு யோக்கியதை வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

பரந்தூரில் அமையவுள்ள புதிய விமான நிலையத் திட்டத்தை எதிர்த்து 13 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் போராடி வருகின்றனர். இவர்களை 2 நாட்களுக்கு முன் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் சந்தித்தார். அப்போது விஜய் பேசுகையில், 8 வழிச்சாலை, காட்டுப்பள்ளி துறைமுக திட்டத்தை எதிர்க்கட்சியாக இருக்கும் போது எதிர்த்தீர்கள். எதிர்க்கட்சியாக இருக்கும் போது விவசாயிகளுக்கு ஆதரவாக இருந்தீர்கள். ஆனால் ஆளுங்கட்சியாக வந்த பின் விவசாயிகளுக்கு எதிராக செயல்படுவதா.. ஆட்சியாளர்களான உங்கள் நாடகத்தை பார்த்துவிட்டு மக்கள் சும்மாயிருக்க மாட்டார்கள். உங்கள் வசதிக்காக விவசாயிகளுடன் நிற்பதும், நிற்காமல் இருப்பதும் என்று நீங்கள் நடத்தும் நாடகங்களை மக்கள் நம்ப மாட்டார்கள். நம்பும்படி நாடகமாடுவதில் தான் நீங்கள் கில்லாடிகளாயிற்றே என்று ஆவேசமாக பேசினார்.

இதற்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதிலடி கொடுத்துள்ளார். தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திருநெல்வெலி மாவட்டம் பாளையங்கோட்டை ஜோதிபுரம் திடலில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் திமுக அமைச்சர் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டு பேசினார். அதில் அவர் கூறியதாவது:-

பரந்தூர் விமான நிலையம் குறித்து நடிகர் நாடகம் ஒன்றை ஆடினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்ன தனது வீட்டுக்காகவா விமான நிலையம் கொண்டு வருகிறார். விமான நிலையப் பிரச்சனைகள் குறித்து எந்த விசாரணையும் செய்யாமல் பேசுகிறார். நேற்று முளைத்தவர்கள் எல்லாம் ஏதேதோ பேசுகிறார்கள். அவர் அப்பாவை நாம் தான் அறிமுகப்படுத்தினோம். அவர் வந்து நமக்கு சவால்விடுகிறார். ஒன்று மட்டும் சொல்கிறேன். திமுகவை எதிர்த்தவன் எவனும் வாழ்ந்ததாகவும் இல்லை, நிலைத்ததாகவும் இல்லை. பழைய வரலாறு நிறைய இருக்கிறது. பேசுவதற்கு ஒரு யோக்கியதை வேண்டும்.. பேசுகிறான் அந்த சின்னப்பையன்..

நாடகமாடுவதிலேயே திமுகவினர் கைதேர்ந்தவர்களாம். நீ யார்ரா.. உன் அப்பா யாரு.. உன் அம்மா யாரு.. என்று கேட்டால் பதில் சொல்ல முடியுமா.. நடிப்பது மட்டுமல்ல நடிப்பதற்கு வசனம் எழுதிக் கொடுத்து, நாட்டுக்கு அடையாளம் காட்டப்பட்டவர்கள் தான் நீங்கள் எல்லாம் என்பதை மறக்க கூடாது. மறைந்த திமுக தலைவர் கருணாநிதி வசனம் எழுதி கொடுத்த படத்தை இயக்கியவர் தான் உன் தந்தை. இதையெல்லாம் மக்கள் மறந்துவிடுவார்கள் என்று பேசுகிறார்கள். நீ பிறப்பதற்கு முன்பாக ஆண்கள் மட்டுமே போலீஸில் இருப்பார்கள். ஆனால் காவல்துறையில் பெண்களுக்கு பணியை ஏற்படுத்தி கொடுத்தவர் கருணாநிதி தான். 1973-74ல் சென்னையில் ஒரே போலீஸ் ஸ்டேஷனில் 25 பெண்களை பணியில் அமர்த்தியவர். இவ்வாறு அவர் பேசியுள்ளார்.