விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் விழுப்புரம் தெற்கு மாவட்ட, இளைஞர் அணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் அறிமுகம் ஆலோசனைக் கூட்டம் இன்று மாவட்ட பொறுப்பாளர் கௌதம சிகாமணி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற மாநில துணைப் பொதுச் செயலாளரான அமைச்சர் பொன்முடி பேசியதாவது:-
புதிது புதிதாக கட்சி ஆரம்பித்து இருப்பவர்கள் எல்லாம் இளைஞர்கள் எங்கள் பக்கம் என்று கூறிவருகிறார்கள். அவர்களை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இளைஞர்களை கூர்தீட்டி 2026 தேர்தல் களத்திற்கு தயாராக்கி கொண்டுள்ளார். நாம் இப்போதே தேர்தலுக்கு தயாராகிவிட்டோம். ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிட்டால் டெபாசிட் கிடைக்காது என்ற காரணத்தால்தான் அதிமுக, பாஜக போட்டியிடவில்லை. சிலர் திடீர் கட்சி ஆரம்பித்து உடனே முதல்வராகிவிடலாம் என கனவு காண்கிறார்கள். அந்த கனவுகளை நாம் தவிடு பொடியாக்கிவிடுவோம்.
ஒருவர் பெரியாரைப் பற்றி இழிவாகப் பேசுகிறார். அவருக்கும் பெரியாருக்கும் என்ன சம்பந்தம்? ஒரு போட்டோவை எடிட் செய்து விளம்பரப்படுத்தி அரசியல் செய்தார். அந்த போட்டோவை எடுத்தவரே அது பொய்யான போட்டோ என கூறிவிட்டார். அவர்களுக்கு தமிழுக்கும் திராவிடத்துக்கும் வேறுபாடு தெரியாது. மொழிப்போர் தியாகிகளுக்கு 25ம் தேதி நினைவுநாள் பொதுக்கூட்டம் நடத்த உள்ளோம். மொழிப்போரில் எவ்வளவு பேர் உயிர்நீத்தார்கள் என்பது எல்லாம் அவருக்குத் தெரியாது.
உண்மையிலேயே தமிழ் என்றால் என்ன என்று பெரியாருக்கு தெரியும். அவரையே இழிவுப்படுத்தும் வகையில் ஒருவர் பேசி கொண்டுள்ளார். அதை தெளிவுபடுத்துவது இளைஞர்களின் கடமை. இனிமேல் திமுகவை வீழ்த்த முடியாது என்பதால் சிலர் எதை எதையோ பேசிவருகிறார்கள். அவர்கள் கண்ணில் மண்ணை தூவுவது இளைஞர்களின் கடமை. 400 வாக்குறுதிகள் அதாவது 80 சதவீதத்தை முதல்வர் நிறைவேற்றியுள்ளார். சொன்னதையும், சொல்லாததையும் செய்பவர் முதல்வர். இதனை நாம் எடுத்து சொல்லவேண்டும். 2026 தேர்தலில் சிறப்பாக பணியாற்றவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.