கோமியத்தை குடிக்கும் நேரத்தில்.. இரும்பின் காலத்தை பாருங்கள்: சு.வெங்கடேசன்!

கோமியத்தைக் குடியுங்கள் எனப் பழமைவாதிகள் போதிக்கும் நேரத்தில் எங்கள் தொழில்நுட்பத்தின் தொன்மையைப் பாருங்கள், இரும்பின் காலத்தைப் பாருங்கள் என்று உலகிற்கு செய்யப்பட்டுள்ள அறிவிப்பு எமது பெருமையின் மகுடம் என்று மதுரை எம்பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி, மாட்டின் மூத்திரத்திற்கு மருத்துவ குணம் இருப்பதாக கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பாஜகவினர் ஆதரவு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் இன்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரும்பின் தொன்மை என்ற புத்தகத்தை வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து மு.க.ஸ்டாலின் பேசுகையில், தமிழ் நிலப்பரப்பில் இருந்து தான் இரும்பின் காலம் தொடங்கியது. 5,300 ஆண்டுகளுக்கு முன் தமிழ் நிலப்பரப்பில் இரும்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பதை அறிவியல் அடிப்படையில் நிறுவுள்ளோம். இது தமிழுக்கும், தமிழினத்திற்கும், தமிழ்நாட்டுக்கும் பெருமை. இந்தியாவின் வரலாறு இனி தமிழ் நிலத்தில் இருந்து தான் எழுதப்பட வேண்டும். அதனை மெய்ப்பிக்கும் ஆய்வுகளை தமிழ்நாடு தொல்லியல் துறை தொடர்ச்சியாக செய்து வருகிறது என்று தெரிவித்தார்.

இதுகுறித்து எழுத்தாளரும், மதுரை எம்பி-யுமான சு.வெங்கடேசன் கூறியுள்ளதாவது:-

“கொல்லனின் சூடான உலையில் பழுக்க இரும்பைக் காய்ச்சும் போது தண்ணீரைத் தெளித்துக் குளிர வைத்தது போல உனது இனிய சொற்கள் வலி நிறைந்த எனது நெஞ்சிற்கு ஆறுதல் அளித்தன” என்கிறது அகநாநூறு. கோமியத்தைக் குடியுங்கள் எனப் பழமைவாதிகள் போதிக்கும் நேரத்தில் எங்கள் தொழில்நுட்பத்தின் தொன்மையைப் பாருங்கள், இரும்பின் காலத்தைப் பாருங்கள் என்று உலகிற்கு செய்யப்பட்டுள்ள அறிவிப்பு எமது பெருமையின் மகுடம். எமது வரலாற்றின் பெருமைமிகு கண்டுபிடிப்புகளைக் கொண்டாடுவோம்.

இரும்பொன், கரும்பொன், கருந்தாது, இரும்பு, எஃகு, கொல்லன், கருமைக்கொல்லன், உலை, உலைக்கூடம், உலைக்கல், துருத்தி, மிதியுலை என்பன போன்ற இரும்பு எஃகுத் தொழில்நுட்பம் தொடர்பான பல பதிவுகள் சங்க இலக்கியத்தில் காணப்படுகின்றன. இவையெல்லாம் கற்பனையில் முகிழ்த்தவை அல்ல. சங்க காலத்திற்கும் முன்பே தமிழ்நிலத்தில் புழக்கத்திலிருந்த தொழில்நுட்பத்திற்கான இலக்கியத்தின் பதிவுகள் என்பது அறிவியல் அடிப்படையில் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது என்கிறது.இன்று தமிழ்நாடு முதல்வர் வெளியிடப்பட்ட ‘இரும்பின் தொன்மை’ குறித்த அறிவிப்பு. 5300 ஆண்டுகளுக்கே முன்பே தமிழ்நாட்டில் சிறந்து விளங்கிய தொழில்நுட்பம் ஐயத்திற்கு இடமின்றி அறிவியல் வழியில் மெய்ப்பிக்கப்பட்டிருப்பது பெரு மகிழ்வு.

இரும்பு புன்னை மரத்தின் கரிய கிளைகளுக்கும்; நீலம் மரத்தின் பசுமையான இலைகளுக்கும்; வெள்ளி மரத்தின் இலைகளின் நடுப்பகுதியில் காணப்படும் நரம்புகளுக்கும் ஒப்பிடும் அதிநுண்ணறிவு இயற்கையைக் கூர்ந்து நோக்கி வளர்த்தெடுக்கப்பட்ட பேரறிவின் அடையாளம். இயற்கையைப் பகுத்தறிவைக் கொண்டு அணுகி வளங்களையும் வாழ்வையும் மேம்படுத்திய பயணமே எமது மரபின் பெருமை. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.