தமிழகத்தில் வேகமாக பரவும் ‘ஸ்க்ரப் டைபஸ்’ காய்ச்சல் தொற்றால் பாதிக்கப்படுவோருக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:-
ஸ்க்ரப் டைபஸ் ( உண்ணி காய்ச்சல் )என்ற பாக்டீரியா தொற்று தமிழ்நாட்டில் அதிகரிப்பதாக செய்திகள் வருகின்றன. “ரிக்கட்ஸியா” எனும் பாக்டீரியா பாதித்த ஒட்டுண்ணிகள், பூச்சிகள் கடிப்பதால் இந்த தொற்று மனிதர்களுக்கு ஏற்படும் எனவும், இத்தொற்று தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் பரவியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
குறிப்பாக திண்டுக்கல் மாவட்டத்தில், ஒரே வாரத்தில் 8 பேர், தமிழ்நாடு முழுவதும் கடந்த 20 நாட்களாக சுமார் 600 பேர் இத்தொற்றால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. மாநிலம் முழுவதும் பரவி வரும் இத்தொற்றுப் பரவலைத் தடுக்கவும், இத்தொற்றால் பாதிக்கப்படுவோருக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கவும் நடவடிக்கைகள் எடுப்பதுடன், இத்தொற்றிற்கான மருந்துகள் உரிய அளவில் இருப்பு உள்ளதை உறுதிசெய்யுமாறு திமுக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.