தமிழ்நாட்டில் இன்றைக்கு கட்சி தொடங்கி உடனேயே ஆட்சிக்கு வருவோம் என்கின்றனர்; நாங்கள் அடுத்த ஆட்சி.. நாங்கள்தான் அடுத்த முதல்வர் என்று சில ‘அனாதை’ நிலையில் சுற்றிக் கொண்டிருப்பவர்கள் எல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.. அவர் யார்? எந்த கட்சித் தலைவர்? என்றெல்லாம் சொல்லி அடையாளம் காட்ட விரும்பவும் இல்லை என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை மறைமுகமாக திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்தார்.
நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 3,000 பேர் இன்று திமுகவில் இணைந்தனர். சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் அனைவரும் இணைந்தனர். நாம் தமிழர் கட்சியின் மண்டலச் செயலாளர், மாவட்ட செயலாளர்கள், எம்பி, எம்.எல்.ஏ. வேட்பாளர்கள் என பலரும் இவர்களில் அடக்கம். இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-
திமுக 1949-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பின்னர் திமுக படிப்படியாக வளர்ந்து 1957-ம் ஆண்டுதான் முதன் முதலாக தேர்தலில் ஈடுபட்டது. ஆனால் இன்றைக்கு சில கட்சிகளைப் பார்க்கிறோம். அனாதை நிலையில் சுற்றுகிறார்கள்.. கட்சி தொடங்கிய உடனேயே ஆட்சிக்கு வருகிறோம்.. வருவோம் என்று சொல்லக் கூடிய நிலை இன்றைக்கு நாட்டிலே இருந்து கொண்டிருக்கிறது. நாங்கள்தான் அடுத்த ஆட்சி; நாங்கள்தான் அடுத்த முதல்வர் என்று அனாதை நிலையில் சுற்றிக் கொண்டிருக்கக் கூடியவர்கள் எல்லாம் பிதற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர் யார்? எந்தக் கட்சி? எந்த தலைவர்? என்றெல்லாம் நான் சொல்ல விரும்பவில்லை.. காரணம் நான் அவர்களை அடையாளம் காட்ட தயாராக இல்லை.. அதான் உண்மை. அவர்கள் பெயரை சொல்லி இந்த மேடையின் கவுரவத்தை குறைக்கவும் விரும்பவில்லை.
நானும் தம்பி உதயநிதி, அண்ணன் துரைமுருகன் ஆகியோர் ‘மாற்றுக் கட்சி’ என்றுதான் சொன்னோம்.. அந்த கட்சியின் பெயரைக் கூட சொல்ல எங்களுக்கு வாய் வரவில்லை.. வேஷமிடுகிறவர்..நாடகமாடுகிறவர் எத்தனையோ கட்சியின் பெயரை சொல்கிறோம்.. ஆனால் இந்த கட்சியின் பெயரை சொல்ல விரும்பவில்லை என்பதற்கு என்ன காரணம்? உண்மையான அரசியல் கட்சியாக இருந்து, மக்களுக்காக பாடுபடக் கூடிய கட்சியாக இருந்து, மக்களுக்காக உழைக்கக் கூடிய கட்சியாக இருந்து, உண்மையில் தமிழனுக்காக பாடுபடக் கூடிய கட்சியாக இருந்தால் நாங்கள் அந்த கட்சியின் பெயரை சொல்வோம். வேஷமிட்டுக் கொண்டிருக்கக் கூடியவர்; நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கக் கூடியவர்களை எல்லாம் நான் அடையாளம் காட்டவிரும்பவில்லை என்பதுதான் உண்மை.
234 தொகுதிகளிலும் வெல்வோம்.. ஒன்றரை ஆண்டுகளில் தேர்தலை சந்திக்கப் போகிறோம்.. யார் யாரோ எதை எதையோ பேசிக் கொண்டே இருக்கட்டும்.. அதைப்பற்றி நமக்கு கவலை இல்லை. நமது சாதனைகளை மக்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.. அதனை நினைவுபடுத்தினாலே போதும்.. 200 அல்ல 234 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெறுவோம். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.