மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதை தடுக்க உறுதியான தூதரக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 3 மீன்பிடிப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 34 மீனவர்களை தனுஷ்கோடி அருகே 25.01.2025 அன்று இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ள நிலையில், கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவித்திட உடனடியாக தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு இன்று (26.01.2025) கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், இலங்கை கடற்படையினரால் நமது மீனவர்கள் கைது செய்யப்படும் மற்றொரு சம்பவத்தை மத்திய வெளியுறவுத்துறை மந்திரியின் கவனத்திற்கு கொண்டு வருவதாக குறிப்பிட்டுள்ள முதல்-அமைச்சர், 25.01.2025 அன்று ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 3 மீன்பிடிப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 34 மீனவர்களை (தமிழ்நாட்டைச் சேர்ந்த 32 மீனவர்கள் மற்றும் கேரளாவைச் சேர்ந்த 2 மீனவர்கள்) தனுஷ்கோடி அருகே அவர்களது மீன்பிடிப் படகுகளுடன் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர் என்று கவலைபடத் தெரிவித்துள்ளார்.
இலங்கை கடற்படையினரால் நமது மீனவர்கள் அடிக்கடி சிறைபிடிக்கப்படும் சம்பவங்கள், கடலோர மீனவ சமுதாயத்தினரிடையே பதட்டத்தையும் அச்ச உணர்வையும் ஏற்படுத்துவதோடு அவர்களது எதிர்காலத்தை நிச்சயமற்றதாகவும், இருண்டதாகவும் ஆக்கியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். எனவே நமது மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதை தடுக்க உறுதியான தூதரக நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியம் என்று முதல்-அமைச்சர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, இலங்கை கடற்படையினரால் நமது மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்கவும், கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்கவும் தூதரக வழிமுறைகள் மூலம் தேவையான அவசர நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதல்-அமைச்சர் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.