ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் சித்தாந்தத்தை ஊக்குவிப்பவர்களை கண்டறியும் நோக்கில் தமிழகத்தில் 16 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு(என்ஐஏ) இன்று (ஜன.28) சோதனை நடத்தியது. குறிப்பிட்ட உள்ளீடுகளின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் சித்தாந்தத்தை ஊக்குவிப்பவர்கள், அந்த அமைப்புக்கு ஆட்களைச் சேர்ப்பவர்கள் ஆகியோரை கண்டறிவது மற்றும் அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுப்பது ஆகியவற்றில் என்ஐஏ தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் சித்தாந்தத்தை ஊக்குவிப்பது மற்றும் ஆட்களை சேர்ப்பது ஆகியவற்றில் ஈடுபடும் சந்தேக நபர்களின் மறைவிடங்களில் என்ஐஏ இன்று காலை முதல் சோதனைகளை நடத்தி வருகிறது. தமிழ்நாட்டில் மொத்தம் 16 இடங்களில் இந்த சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. சந்தேக நபர்கள் தொடர்பாக கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இந்த சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த சோதனைகள், இது தொடர்பான ஆதாரங்களை கண்டுபிடிப்பதை நோக்கமாகக் கொண்டவை என நடவடிக்கைக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர்கள் மீது கடந்த ஆண்டு வழக்குப்பதிவு செய்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், அவர்களின் பங்கு வெளிப்பட்டது.
கடந்த ஆண்டு அக்டோபர் 21-ம் தேதி, தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பு வழக்கில், ஐஎஸ்ஐஎஸ்-ஆல் ஈர்க்கப்பட்ட மூன்று குற்றவாளிகளை என்ஐஏ கைது செய்தது. அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மூன்று குற்றவாளிகளும் பயங்கரவாதச் செயலுக்கு நிதி வழங்க கூட்டுச் சேர்ந்தது தெரியவந்தது.