உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்துள்ள நிலையில், அன்புக்குரியவர்களை இழந்த பக்தர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவிப்பதாக குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பிரயாக்ராஜ் மஹாகும்பத்தில் நடந்த விபத்து மிகவும் வருத்தமளிக்கிறது. இதில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த பக்தர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். இதனுடன், காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்குவதில் உள்ளூர் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இது தொடர்பாக, நான் முதல்வர் யோகி ஜியுடன் பேசியுள்ளேன், மேலும் மாநில அரசுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
குடியரசு தலைவர் திரவுதி முர்மு வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பிரயாக்ராஜ் மஹாகும்பில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவம் மிகவும் வருத்தமளிக்கிறது. உயிரிழந்த பக்தர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன், காயமடைந்த பக்தர்கள் அனைவரும் விரைவில் குணமடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
மவுனி அமாவாசையை முன்னிட்டு, உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் திரிவேணி சங்கமத்தில் புனித நீராட ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர். இதில், ஏற்பட்ட கூட்ட நெரசில் காரணமாக பலர் காயமடைந்துள்ளனர். குறைந்தது 15 பேர் உயிரிழந்திருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. எனினும், இந்த தகவல் இதுவரை உத்தரப்பிரதேச அரசு அல்லது அதிகாரிகளால் உறுதிப்படுத்தப்படவில்லை.
இதனிடையே, கும்பமேளாவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள டிஐஜி வைபவ் கிருஷ்ணா கூறுகையில், “அமிர்த குளியல் தொடங்க உள்ளது.. அனைத்தும் பாரம்பரியமாக மேற்கொள்ளப்படும். அனைத்து அகாடக்களுக்கும் அவர்களின் பாரம்பரிய ஊர்வலங்களில் காவல்துறையினரும் பிற அரசு அதிகாரிகளும் உதவுவார்கள். நிலைமை கட்டுக்குள் உள்ளது. இன்று காலை சம்பவத்திற்கான காரணங்களை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்ததால் இது நடந்தது. 10 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என தெரிவித்தார்.
கும்பமேளாவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வரும் சிறப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் திவேதி, “கூட்டம் அதிகமாக இருந்ததால் சில பக்தர்கள் காயமடைந்தனர். நிலைமை முற்றிலும் கட்டுப்பாட்டில் உள்ளது. எந்த விதமான வதந்திகளுக்கும் கவனம் செலுத்தக்கூடாது. அமிர்த குளியல் விரைவில் தொடங்கும். அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. பல காட்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அந்த காட்களில் மக்கள் எளிதாக நீராடுகிறார்கள். உயிரிழப்புகள் அல்லது காயங்கள் குறித்த தகவல் என்னிடம் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யாநாத் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “வதந்திகளில் கவனம் செலுத்தாமல் பொறுமையுடன் செயல்படுமாறு அனைத்து மதிப்பிற்குரிய துறவிகள், பக்தர்கள், மற்றும் குடிமக்களிடம் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன். உங்கள் அனைவருக்கும் சேவை செய்ய நிர்வாகம் விடாமுயற்சியுடன் செயல்படுகிறது” என தெரிவித்துள்ளார்.
முன்னதாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “அன்பான பக்தர்களே பிரயாக்ராஜுக்கு வாருங்கள், கங்கையில் நீராடுங்கள், சங்கம் காட் முகத்துவாரம் நோக்கிச் செல்ல முயற்சிக்காதீர்கள். நீங்கள் அனைவரும் நிர்வாகத்தின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி ஒத்துழையுங்கள். சங்கத்தின் அனைத்து காட்களிலும் மக்கள் நிம்மதியாக புனித நீராடி வருகின்றனர். எந்த வதந்திகளையும் நம்ப வேண்டாம்.” என்று குறிப்பிட்டிருந்தார்.