தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அரசியல் செய்கிறார்: அர்விந்த் கேஜ்ரிவால்!

தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அரசியல் செய்கிறார், தேர்தல் ஆணையத்தின் நம்பகத் தன்மையை அழித்துவிட்டார் என்று அர்விந்த் கேஜ்ரிவால் குற்றம் சாட்டினார்.

டெல்லி சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 5-ல் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான அர்விந்த் கேஜ்ரிவால் தனது பிரச்சாரத்தில், டெல்லி மக்களின் முக்கிய குடிநீர் ஆதரமாக உள்ள யமுனை ஆற்றில் ஹரியானா பாஜக அரசு விஷம் கலந்ததாக குற்றம் சாட்டினார். இது தொடர்பாக பாஜக அளித்த புகாரின் பேரில் விளக்கம் அளிக்குமாறு கேஜ்ரிவாலை தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டது.

இதற்கு கேஜ்ரிவால் நேற்று முன்தினம் அளித்த விளக்கத்தில், “சமீப காலங்களில் ஹரியானாவில் இருந்து பெறப்பட்ட நீர் மிகவும் மாசுபட்டதாக உள்ளது. மனித ஆரோக்கியத்தை பாதிக்கும் வகையில் மிகவும் நச்சுத்தன்மை கொண்டதாக உள்ளது. அந்த நச்சு தண்ணீரை மக்கள் குடிக்க அனுமதித்தால் அது கடும் உடல்நலக் குறைவு மற்றும் உயிரிழப்புக்கு வழிவகுக்கும்” என்று கூறியிருந்தார். ஆனால் இது திருப்தி அளிக்கவில்லை எனவும் புதிய விளக்கம் அளிக்குமாறும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

இதுகுறித்து கேஜ்ரிவாலுக்கு தேர்தல் ஆணையம் நேற்று எழுதிய கடிதத்தில், “அரசு விஷம் கலந்ததாக நீங்கள் கூறிய குற்றச்சாட்டுடன் யமுனையில் அமோனியா அளவு அதிகரித்துள்ள பிரச்சினையை இணைக்க வேண்டாம். யமுனையில் எந்த வகையான விஷம், எவ்வளவு, எந்த விதத்தில் கலப்பட்டது என்பதை ஆதாரத்துடன் தெரிவிக்க வேண்டும். டெல்லி நீர் வாரிய பொறியாளர்கள் எந்த இடத்தில் சோதனை நடத்தினர். எந்த வகை சோதனையில் அதில் விஷம் கண்டறியப்பட்டது என்பது குறித்து வெள்ளிக்கிழமை (இன்று) காலை 11 மணிக்கும் விளக்கம் அளிக்க வேண்டும். தவறினால் தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்கும்” என்று அதில் கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து கேஜ்ரிவால் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், “தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை அழித்துவிட்டார். பணி ஓய்வுக்கு பிறகு அவர் பதவி எதிர்பார்க்கிறார். ராஜீவ் குமார் போன்று வேறு யாரும் தேர்தல் ஆணையத்தை இவ்வளவு சேதப்படுத்தவில்லை. அவர் விரும்பினால் டெல்லி தேர்தலில் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிடலாம். நான் உயிருடன் இருக்கும் வரை டெல்லி மக்களை விஷத் தண்ணீரை குடிக்க விடமாட்டேன். 2 நாட்களில் அவர்கள் என்னை கைது செய்வார்கள் என்று எனக்குத் தெரியும். இதற்கு நான் பயப்படமாட்டேன்” என்றார்.

இதற்கிடையில் டெல்லி தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நேற்று பேசுகையில், “டெல்லி – ஹரியானா மக்கள் இடையே கேஜ்ரிவால் மோதலை ஏற்படுத்துகிறார். மக்களிடையே பீதியை ஏற்படுத்த முயற்சிக்கிறார். அவர் அரசியலில் இருக்க தகுதியற்றவர். யமுனை சுத்திகரிப்பு திட்டங்களில் டெல்லி ஆம் ஆத்மி அரசு ரூ.8,000 கோடி ஊழல் செய்துள்ளது” என்றார்.