பட்ஜெட் பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்தும் வகையிலும் அமைந்திருக்கிறது: டிடிவி தினகரன்!

“மத்திய பட்ஜெட்டை ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது குடிமக்கள் அனைவருக்கும் நம்பிக்கையூட்டும் வகையிலும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேலும் வலுப்படுத்தும் வகையிலும் அமைந்திருக்கிறது” என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு இன்று தாக்கல் செய்திருக்கும் 2025-2026 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை ஏழை, எளிய மக்கள், மாணவர்கள், இளைஞர்கள், விவசாயிகள், பெண்கள், தொழில்முனைவோர்கள் என அனைத்து தரப்பு மக்களின் வளர்ச்சியையும் பொருளாதார நிலைத்தன்மையையும் உறுதிபடுத்தும் வகையில் அமைந்திருப்பது அனைத்து வகையிலும் வரவேற்புக்குரியது.

அங்கன்வாடி குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து, அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும் இணைய வசதி, மாணவ, மாணவியர்களின் திறனை மேம்படுத்தும் வகையில் 50 ஆயிரம் அடல் டிங்கரிங் ஆய்வகங்கள், அவரவர் தாய்மொழியில் டிஜிட்டல் பாடங்கள், ஐஐடி-க்கான இடங்கள் அதிகரிப்பு, கல்விக்கான செயற்கை நுண்ணறிவு மையம் (AI) என நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் அனைவருக்கும் தரமான கல்வி வழங்கப்படுவதை உறுதிபடுத்தும் வகையில் அமைந்திருக்கிறது.

மாணவர்களின் மருத்துவக் கனவை நினைவாக்கும் வகையில் அடுத்த ஆண்டில் கூடுதலாக ஆயிரம் மருத்துவ சேர்க்கை பணியிடங்கள், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் 200 இடங்களில் சிகிச்சை மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் இணைய வசதி, அரிய வகை நோயால் பாதிக்கப்படுவோரை மீட்கும் வகையில் 36 வகையிலான உயிர்காக்கும் மருந்துகளுக்கு சுங்கவரி ரத்து போன்ற திட்டங்கள் மருத்துவத்துறைக்கு கூடுதல் ஊக்கமளிக்கும் வகையில் அமைந்துள்ளன.

கிஷான் கிரெடிட் கார்டு மூலம் 7.7 கோடி விவசாயிகளுக்கு குறுகிய கால கடன், 1.7 கோடி விவசாயிகளுக்கு பயனளிக்கும் புதிய வேளாண் திட்டம், விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கான கடன் பெறும் வரம்பு 3 லட்ச ரூபாயில் இருந்து 5 லட்சமாக அதிகரிப்பு, பருப்பு வகை தானிய உற்பத்தியில் தன்னிறைவு அடைய புதிய திட்டம், போன்ற விவசாயம் மற்றும் விவசாயிகள் நலன் சார்ந்த திட்டங்களோடு, பட்டியலின பெண் தொழில்முனைவோர்களுக்கு 5 லட்சம் ரூபாய் கடன் திட்டம், சிறுகுறு தொழில் நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாதத் தொகை 5 கோடி ரூபாயிலிருந்து 10 கோடி ரூபாயாக அதிகரிப்பு, தேசிய அளவில் பொம்மை தயாரிக்க சிறப்புத் திட்டம் அறிவித்திருப்பது விவசாயிகள் மற்றும் சிறுகுறு தொழில் நிறுவனங்கள் மீது மத்திய அரசு வைத்திருக்கும் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது.

மாநிலங்களுக்கு 50 ஆண்டுகளுக்கு 1.50 லட்சம் கோடி வரை வட்டி இல்லாத கடன், புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கம், வளர்ந்து வரும் நகரங்களுக்கு ஒரு லட்சம் கோடி நிதி, மின்சார உற்பத்தியை அதிகரிக்க 20 ஆயிரம் கோடி ரூபாய், கடல்சார் மேம்பாட்டுக்கு 25 ஆயிரம் கோடி ரூபாய், விண்வெளி உலகில் மேலும் பல சாதனைகளை படைக்க ஜியோ ஸ்பேஸ் இயக்கம், மின்சார வாகனங்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் லித்தியம் பேட்டரிக்கான சுங்கவரி ரத்து, கிராமப்புறங்களில் ஒரு லட்சம் தபால் நிலையங்கள் என நாட்டின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், பொருளாதாரத்தை முன்னேற்றப்பாதைக்கு அழைத்துச்செல்லும் வகையிலும் இந்த நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

மேலும், தனிநபர் வருமான வரி உச்சவரம்பு 12 லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டிருப்பது நடுத்தர மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் அமைந்திருக்கிறது. மத்திய பட்ஜெட்டை ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது குடிமக்கள் அனைவருக்கும் நம்பிக்கையூட்டும் வகையிலும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேலும் வலுப்படுத்தும் வகையிலும் அமைந்திருக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.