ஊழியர்களின் பணி புறக்கணிப்பால் முடங்கிய பத்திர பதிவு அலுவலகங்கள்!

முகூர்த்த நாளில் பத்திரப் பதிவுகள் அதிகமாக இருக்​கும் என்ப​தால் தமிழகத்​தில் உள்ள அனைத்து பத்திரப் பதிவு அலுவல​கங்​களும் பிப்​.2-ம் தேதி ஞாயிற்றுக்​கிழமை செயல்​படும் என்று அரசு அறிவித்த நிலை​யில் ஊழியர்கள் பணியை புறக்​கணித்​த​தால் பத்திரப் பதிவு அலுவல​கங்கள் வெறிச்​சோடிக் காணப்​பட்டன. இதனால் பொது​மக்கள் அதிருப்தி அடைந்​தனர்.

முகூர்த்த நாளான பிப்​.2-ம் தேதி ஞாயிற்றுக்​கிழமை கூடு​தலான பத்திரப் பதிவுகள் இருக்​கும் என்ப​தால் தமிழகத்​தில் உள்ள அனைத்து பத்திரப் பதிவு அலுவல​கங்​களும் அன்றைய தினம் காலை 10 மணி முதல் செயல்​படும். இந்த விடு​முறை நாளில் பணிபுரி​யும் ஊழியர்​களுக்கு மாற்று விடுப்பு வழங்​கப்​படும்” என அரசு அறிவித்​தது.

இதனிடையே, பதிவுத் துறை​யின் ஊழியர் சங்கங்​களின் மாநில ஒருங்​கிணைப்​புக் குழு​வின் இணைய​வழிக் கூட்டம் நேற்று முன்​தினம் நடைபெற்​றது. இதில், பிப்​.2-ம் தேதி ஞாயிற்றுக்​கிழமை பணி நாளாக அறிவிக்​கப்​பட்​டால் அதனை புறக்​கணிப்பது என முடி​வெடுக்​கப்​பட்​டது. அதன் ​படி, நேற்று பத்திரப் பதிவு அலுவலக ஊழியர்​கள், அலுவலர்கள் பணிக்கு வரவில்லை. அதனால் பத்திரப் பதிவு அலுவல​கங்கள் வெறிச்​சோடிக் காணப்​பட்டன. இதனால் பொது​மக்​களும் அதிருப்​தி​யுடன் திரும்​பிச் சென்றனர்.

சென்னை மற்றும் புறநகர் பகுதி​களில் உள்ள பத்திரப் பதிவு அலுவல​கங்​களும் திரு​வள்​ளூர், செங்​கல்​பட்டு, காஞ்​சிபுரம், மதுரை, தேனி, திண்​டுக்​கல், சிவகங்கை, ராமநாத​புரம், விருதுநகர் மாவட்​டங்​களி​ல் உள்ள அலுவல​கங்​களும் நேற்று செயல்​பட​வில்லை. காரைக்​குடி சார்​ப​திவாளர்-1 மற்றும் 2 ஆகிய இரு அலுவல​கங்களை கடைநிலை ஊழியர்கள் பெயரள​வில் திறந்து வைத்​திருந்​தனர்.

சேலம் மாவட்​டத்​தில் உள்ள 57 பத்திரப்​ப​திவு அலுவல​கங்​களும் செயல்​பட​வில்லை. இதுபோல, நாமக்​கல், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்​டங்​களி​லும் பத்திரப் பதிவு அலுவல​கங்கள் மூடப்​பட்​டிருந்தன. திருநெல்​வேலி, தென்​காசி, தூத்​துக்​குடி, கன்னி​யாகுமரி மாவட்​டங்​களில் உள்ள பத்திரப்​ப​திவு அலுவலகங்களில் நேற்று பத்திரப்​ப​திவு நடைபெற​வில்லை. கோவை, ராணிப்​பேட்டை, தருமபுரி மாவட்​டங்களில் உள்ள பத்திரப்​ப​திவு அலுவல​கங்​களும் பூட்​டியே கிடந்தன.