2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தை இங்கு தொடங்குறேன்: உதயநிதி ஸ்டாலின்!

2026 சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி வைப்பதாக துணை முதல்வரும் திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று (பிப்ரவரி 2) ராமநாதபுரம் மாவட்டத்தில் அறிவித்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் நேற்று நடைபெற்ற திமுக பேரூர் தலைவர் ராஜா இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி உதயநிதி ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பெண்களையும், பெண்களின் உரிமைகளையும் பாதுகாப்பதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மிகவும் கவனம் செலுத்தி வருகிறார். தமிழகத்தில் நீட் தேர்வை ஒழிப்பதே எங்களுடைய இலக்கு. அதற்காக நமது முதல்வர் சட்டப் போராட்டம் நடத்தி வருகிறார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தபால்காரர் வேலை தான் பார்க்க வேண்டும். சட்டமன்றத்திற்குள் வாக்கிங் போகும் ஒரே ஆளுநர் இவர் தான்.

ஒன்றிய அரசு பட்ஜெட்டில் தமிழ்நாட்டை தவிர்த்துள்ளது. தமிழ்நாடு என்ற வார்த்தையை நீக்கி விட்டது. அந்த ஒன்றிய அரசை தமிழக மக்கள் தேர்தலில் புறக்கணிக்க வேண்டும். பிரதமர் மோடி தேர்தல் நேரத்தில் தமிழகத்துக்கு 7 முறை வருகை தந்தார். ஆனால் ஆட்சி அமைத்த பின்பு தமிழ்நாட்டை எட்டிக் கூட பார்க்கவில்லை. இதை தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஈரோடு இடைத்தேர்தலில் தோற்று விடுவோம் என விலகிக் கொண்டார். 2026 சட்டமன்ற தேர்தலில் 200க்கும் மேற்பட்ட இடங்களை பிடித்து நாம் மீண்டும் ஆட்சி அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலினை மீண்டும் ஆசனத்தில் அமர வைக்க வேண்டும். அதற்காக தமிழகம் முழுவதும் உள்ள இளைஞர்களும், கட்சித் தொண்டர்களும் அயராது உழைக்க வேண்டும்.

இந்த தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் 200க்கும் மேற்பட்ட சட்டமன்ற தொகுதிகளை பிடிக்க வேண்டும். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இதே ராமநாதபுரம் மாவட்ட பகுதியில் தான் எனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினேன். அதேபோல 2026ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல் முன்னோடியாக இந்த நாளில் தேர்தல் பிரசாரத்தை இங்கு தொடங்கி வைக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.