ட்ரம்ப் பதவியேற்பு குறித்து ராகுல் சொல்வது சுத்தப் பொய்!: ஜெய்சங்கர்!

ட்ரம்ப்பின் பதவியேற்பு விழாவுக்காக பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட வேண்டும் என்பதற்காகவே வெளியுறவுத் துறை அமைச்சர் டிசம்பரில் பலமுறை அமெரிக்கா சென்றார் என்ற ராகுல் காந்தியின் கூற்றை அமைச்சர் ஜெய்சங்கர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். மேலும், தனது டிசம்பர் மாத அமெரிக்க பயணம் குறித்து ராகுல் காந்தி வேண்டுமென்றே பொய்யைப் பரப்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது:-

கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நான் அமெரிக்கா சென்றது குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வேண்டுமென்றே பொய்யைச் சொல்கிறார். நான் அமெரிக்க வெளியுறவு செயலாளரையும், ஜோ பைடன் நிர்வாகத்தின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரையும் சந்திக்கச் சென்றேன். அத்துடன், வெளியுறவுத் தூதர்களின் பொதுக் குழுக் கூட்டத்துக்கு தலைமை தாங்கவே அமெரிக்கா சென்றேன். நான் அங்கு தங்கியிருந்தபோது புதிதாக வரவிருக்கும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் என்னைச் சந்தித்தார்.

அந்தப் பயணத்தில், எந்தக் கட்டத்திலும் பிரதமருக்கான அழைப்பு குறித்து விவாதிக்கப்படவில்லை. இதுபோன்ற விழாக்களில் நமது பிரதமர் கலந்து கொள்வதில்லை என்று அனைவருக்கும் தெரியும். பொதுவாக இந்தியா தனது சிறப்புத் தூதர்களாலேயே பிரதிநித்துவப்படுகிறது. ராகுல் காந்தியின் பொய் அரசியல் உள்நோக்கம் கொண்டதாக இருக்கலாம். ஆனால், இது வெளிநாடுகளில் நமது நாட்டின் நற்பெயரை சேதப்படுத்துகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.