மதுரையில் இன்றும், நாளையும் 144 தடை உத்தரவு!

திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக இந்து முன்னணி அமைப்பினர் நாளை போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்து இருந்தனர். இந்நிலையில் மதுரை மாநகரில் வெளிநபர்கள் பிரவேசிக்காத வகையில் 144 தடை உத்தரவு (163 BNSS) பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்து முன்னணி போராட்டம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்றும், நாளையும் மதுரையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மதுரை மாநகரில் இன்று காலை முதல் நாளை இரவு 12 மணி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என மாவட்ட கலெக்டர் சங்கீதா அறிவித்துள்ளார். பொது அமைதியை குலைக்கும் வகையில் போராட்டங்கள், தர்ணா மற்றும் பொதுக்கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் மலைமீது காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் தர்காவில் தினசரி ஏராளமானோர் வழிபாடு நடத்தி வருகின்றனர். ஆனால், கடந்த சில நாட்களாக மலைமீதுள்ள தர்காவில் ஆடு மற்றும் கோழியை உயிர்பலி கொடுக்கக் கூடாது என இந்து அமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இது அரசியல் விவகாரமாகவும் உருவெடுத்துள்ளது.

இந்நிலையில் தான், திருப்பரங்குன்றம் மலையை காக்க, நாளை அறப்போராட்டம் நடத்தப்படும் என இந்து முன்னணி அமைப்பு அறிவித்துள்ளது. இதனால் அசம்பாவிதங்களோ, மதரீதியான மோதல்களே ஏற்படுவதை தடுக்கும் நோக்கில், மதுரை மாவட்ட நிர்வாகம் தற்போது மாநகர் முழுவதும் இரண்டு நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளது. இருப்பினும், திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள காசிவிஸ்வநாதர் கோவில் மற்றும் தர்காவில் வழிபட தடையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவு தொடர்பாக மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் கூறுகையில், “திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக சில நாட்களாக இரு வேறு பிரிவினர்களுக்கு இடையே பிரச்னைகள் ஏற்பட்டநிலையில், அவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. ஐகோர்ட்டு மதுரைக் கிளையிலும் இருபிரிவினர் சார்பில் 5 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு விசாரணையில் உள்ளது. இந்நிலையில் இந்து முன்னணி அமைப்பு நடத்த இருந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அனுமதி மறுத்த விவரம் தெரிந்து வீடியோ, தண்டோரா போட்டு திருப்பரங்குன்றத்திற்கு பொதுமக்களை அதிக அளவில் திரட்டும் செயல்களில் இந்து முன்னணி அமைப்பு ஈடுபட்டு வருவது தெரிய வருகிறது. ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்த நிலையில் பொதுமக்கள் யாரும் பங்கேற்க வேண்டாம். மீறி பங்கேற்போர் மீதும், வாகனங்கள் மீதும் சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என அவர் எச்சரித்துள்ளார்.