மக்களுக்கான ஆட்சியை விரைவில் கட்டமைப்போம்: ஆதவ் அர்ஜுனா

மக்களுக்கான ஆட்சியை விரைவில் கட்டமைப்போம் என்று தமிழக வெற்றிக் கழக ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார்.

தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்று கட்சி கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து, கட்சியின் கொள்கை தலைவர்களாக அறிவிக்கப்பட்ட பெரியார், அம்பேத்கர், காமராஜர், வேலு நாச்சியார், அஞ்சலையம்மாள் ஆகியோரின் சிலைகளை விஜய் திறந்து வைத்து ஒவ்வொரு சிலைக்கும் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசியலில் மாபெரும் ஜனநாயக சரித்திரத்தைப் படைத்திடும் போராட்டத்தில் இரண்டாம் ஆண்டு அடியெடுத்து வைக்கிறது தமிழக வெற்றிக் கழகம். சமத்துவம், சமூக நீதி, சம நீதி என்ற மானுட கோட்பாட்டையும், அதற்கு வழிகாட்டியாக, கொள்கை ஆசான்களாக ஐந்து வரலாற்றுத் தலைவர்களையும் கொண்டுள்ள நமது தமிழக வெற்றிக் கழகம், புதிய சகாப்தத்தை உருவாக்கவுள்ளது. மக்கள் துணையுடன், தலைவரின் வழிகாட்டுதலுடன், முன்னணி நிர்வாகிகளின் ஒத்துழைப்புடன், தொண்டர்களின் உழைப்புடன் நாம் நம் மக்களுக்கான அந்த மகத்தான ஆட்சியை விரைவில் கட்டமைப்போம்.

கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்தி, நூறாண்டுக் காலம் களமாடும் இயக்கமாக நமது வெற்றிக் கழகத்தை வீறுநடை போடச் செய்யும் வரலாற்றுப் பணி நம் முன் உள்ளது. அந்த இலக்கை அடைய அனைவரும் களத்தில் இறங்கி அயராது உழைப்போம் என்று இந்த இனிய நாளில் உறுதியேற்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.