தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்கு பட்ஜெட்டில் ரூ.6,626 கோடி நிதி ஒதுக்கீடு: அஸ்வினி வைஷ்ணவ்!

மத்திய பட்ஜெட்​டில், தமிழக ரயில்வே திட்​டங்​களுக்கு ரூ.6,626 கோடி ஒதுக்​கப்​பட்​டுள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.

இதுகுறித்து, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், டெல்​லி​யில் இருந்து காணொலி வாயி​லாக, செய்தியாளர்​களிடம் கூறிய​தாவது:-

மத்திய பட்ஜெட்​டில், இந்திய ரயில்​வே​யில் பாது​காப்பு கட்டமைப்புகளை மேம்​படுத்து​வதற்​காக, ரூ.1 லட்சத்து 16 கோடியே 514 கோடி ஒதுக்​கப்​பட்​டுள்​ளது. சிக்​னல், தொலை​தொடர்பு துறை, தண்ட​வாளம் மேம்​பாடு உட்பட பல பணிகளுக்கு நிதி ஒதுக்​கப்​பட்​டுள்​ளது.

பட்ஜெட்​டில், தமிழகத்​தில் நடக்​கும் ரயில்வே திட்​டங்​களுக்கு ரூ.6,626 கோடி ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டுள்​ளது. இது கடந்த 2009–14-ம் ஆண்டு​களோடு ஒப்பிடும்​போது 7.5 மடங்கு அதிக​மாகும். முந்தைய பட்ஜெட்​டில் தமிழகத்​துக்கு ரூ.6,362 கோடி ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டது. கடந்த 2014-ல் இருந்து 1,303 கி.மீ. தொலை​வுக்கு பாதை அமைக்​கப்​பட்​டுள்​ளது. 2014-ம் ஆண்டு முதல் இதுவரை 2,242 கி.மீ. தொலைவு ரயில் பாதைகள் மின்​மய​மாக்​கப்​பட்​டுள்ளன. மேலும், 22 ரயில் பாதை திட்​டங்கள் ரூ.33,467 கோடி​யில் நடைபெறுகின்றன.

இதுதவிர எழும்​பூர், மதுரை, ராமேசுவரம் உட்பட 5 ரயில் நிலை​யங்களை ரூ.1,896 கோடி​யில் சர்வதேச தரத்​தில் மேம்​படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. இதுதவிர, அம்ரித் பாரத் திட்​டத்​தின்​கீழ், 77 ரயில் நிலை​யங்கள் ரூ.2,948 கோடி​யில் மேம்​படுத்​தப்​பட்டு வருகின்றன. தமிழகத்​தில் 8 வந்தே பாரத் ரயில்கள் தற்போது இயக்​கப்​படு​கின்றன. கூடுதல் ரயில்​களை​யும் இயக்கி வருகிறோம். வரும் 4 முதல் 5 ஆண்டு​களில் புதிய தண்ட​வாளங்கள் அமைக்​கப்​படும். தமிழகத்​தில் நடைபெறும் திட்​டங்​களுக்கு 3,389 ஹெக்டர் நிலம் தேவை. இதுவரை​ 25 சதவீத நிலம் மட்டுமே கையகப்​படுத்​தப்​பட்​டுள்​ளது. எனவே, ரயில்​பாதை திட்​டங்களை விரைந்து முடிக்க மாநில அரசின் ஆதரவு தேவை.

இந்த பட்ஜெட்​டில் 50 புதிய நமோ பாரத் ரயில்கள் இயக்க அனும​திக்​கப்​பட்​டுள்​ளது. இதுதவிர பட்ஜெட்​டில் 100 புதிய அம்ரித் பாரத் ரயில்​கள், 200 புதிய வந்தே பாரத் ரயில்கள் இயக்க அனும​திக்​கப்​பட்​டுள்​ளது. ரூ.40,000 கோடி மதிப்​பிலான புதிய திட்​டப்​பணிகள் அனும​திக்​கப்​பட்​டுள்ளன. இதேபோல, கேரளா​வுக்கு ரூ.3,042 கோடி​, கர்நாடகாவுக்கு ரூ.7,564 கோடி​ ஒதுக்​கப்​பட்​டுள்​ளது. இவ்வாறு அவர் பேசினார்.

தெற்கு ரயில்​வே கூடுதல் பொது​மேலாளர் கவுசல் கிஷோர் கூறும்​போது, “சென்னை கடற்கரை – எழும்​பூர் இடையே 4-வது புதிய ரயில் பாதை பணி, அடுத்த 2 மாதங்​களில் முடி​யும். அதுபோல, 77 ரயில் நிலை​யங்​களில் மேம்​பாட்டு பணிகள் நடைபெறுகின்றன. ரயில் விபத்துகளை தவிர்க்க, 1,460 கி.மீ. தொலை​வுக்கு ‘கவச்’ தொழில்​நுட்பம் நிறுவ திட்​ட​மிட்​டப்​பட்​டது. முதல்​கட்​ட​மாக, 601 கி.மீ. தொலை​வுக்கு பணிகளை மேற்​கொள்ள இருக்​கிறோம்” என்​றார். சென்​னை ர​யில்வே​ கோட்​ட மேலா​ளர்​ ​விஸ்​வநாத்​ ஈர்​யா உள்ளிட்ட அதிகாரி​கள்​ உடன் இருந்​தனர்​.