வேங்கை வயலில் நீதி கிடைக்கவில்லை அங்கே உள்ள மக்கள் மதம் மாறுவதை தவிர வேறு வழி இருக்க முடியாது, என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் எம்பி திருமாவளவன் கூறியுள்ளார்.
வேங்கை வயல் விவகாரத்தில் சமீபத்தில் உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் அளித்த நிலையில், இது தொடர்பான போலீஸ் விசாரணையை , குற்றப்பத்திரிக்கையை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் எம்பி திருமாவளவன் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். இந்த நிலையில் விசிக கூட்டம் ஒன்றில் அவர் பேசுகையில், கடைசி மூச்சு வரை சனாதனத்தை எதிர்த்த நபர் என்றால் அது புரட்சியாளர் அம்பேத்கார்தான். பெரியாரை விட ஒருபடி மேலே போனார் புரட்சியாளர் அம்பேத்கார்தான். நீ இந்த மதத்தில் இருப்பதால்தானே இப்படி செய்கிறாய் என்று மதம் மாறுகிறேன் என்று கூறினார். வேங்கை வயலில் நீதி கிடைக்கவில்லை அங்கே உள்ள மக்களும் மதம் மாறுவதை தவிர வேறு வழி இருக்க முடியாது. சிலரிடம் நான் அவசரப்பட வேண்டாம் என்று கூறினேன். ஆனால் வேங்கை வயலில் நீதி கிடைக்க வேண்டும்.. அப்படி இல்லையென்றால் அவர்களுக்கும் மதம் மாறுவதை தவிர வேறு வழியே இல்லை, என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் எம்பி திருமாவளவன் குறிப்பிட்டு உள்ளார்.
இந்நிலையில் திருமாவளவன் பதிவிட்டுள்ளதாவது:-
வேங்கைவயல் கிராமத்தில் மக்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை கண்டித்து அறவழியில் போராடி வருகிறார்கள். அவர்களை அங்கே சென்று சந்திப்பதற்கு காவல்துறை கெடுபுடிகள் செய்வது அதிர்ச்சியளிக்கிறது. காவல்துறை இந்த கெடுபிடி நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறேன். தமிழ்நாடு அரசுக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன்.
வேங்கைவயலில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்திருக்கிறார். அவரது உடலை நல்லடக்கம் செய்ய வேண்டும். ஆனால் காவல்துறை கடுமையான கெடுபிடிகளை கையாண்டு வருகிறது. அந்த ஊரை ஒரு தீவாக மாற்றி இருக்கிறார்கள். உள்ளே யாரும் நுழைய முடியாது வெளியே யாரும் போக முடியாது என்கிற அளவுக்கு வேங்கைவயல் தலித் மக்களை காவல்துறை தனிமைப்படுத்தி இருப்பது நெருக்கடிக்கு உள்ளாக்கியிருப்பது அதன் மூலம் மன உளைச்சலை ஏற்படுத்திருப்பது மிகுந்த கவலையளிக்கிறது. மாண்புமிகு முதல்வர் அவர்கள் உடனே இதில் தலையிட வேண்டும். காவல்துறையின் கெடுபிடிகளை கைவிட ஆணையிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். காலமாகி இருக்கும் மூதாட்டியின் உடலை நல்லடக்கம் செய்வதற்கு உரிய அனுமதியை வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.
வேங்கை வயல் வழக்கில் தமிழ்நாடு காவல்துறை பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மூவரை குற்றவாளிகள் எனக் கூறியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. காவல்துறையின் குற்றப்பத்திரிக்கையை விசாரணை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளக் கூடாது; மேல்விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். வேங்கை வயல் வழக்கில் உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு காவல்துறையின் சி.பி.சி.ஐ. டி சார்பில் பிரமாண பத்திரமொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் இந்த வழக்கில் கடந்த 20ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டதாகவும், மூன்று பேர் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முரளி ராஜா, சுதர்சன், முத்துக்கிருஷ்ணன் ஆகிய மூன்று பேர் குற்றவாளிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மூவரும் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். பட்டியல் சமூகத்தினர் குடிக்கும் தண்ணீரில் மலம் கலந்ததாகத்தான் வழக்கு. அந்த வழக்கில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்களே குற்றவாளிகள் என்று காவல்துறை கூறுவது அதிர்ச்சி அளிக்கிறது. இது ஏற்கத்தக்கதாக இல்லை. எனவே, சி பி சி ஐ டி சமர்ப்பித்திருக்கும் குற்றப் பத்திரிகையை விசாரணை நீதிமன்றம் ஏற்கக் கூடாது எனவும் மேல்விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் வலியுறுத்துகிறோம்.
வேங்கை வயலில் குடிநீரில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட குற்றம் நிகழ்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. ஆரம்ப நிலையிலேயே இந்த வழக்கில் காவல்துறை பட்டியல் சமூகத்தினருக்கு எதிராக நடந்து கொள்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அதனால்தான் சிபிஐ விசாரணை வேண்டுமென்று கோரிக்கைகள் எழுந்தன. அந்தச் சூழ்நிலையில்தான் இந்த வழக்கை 14.01.2023 அன்று சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு ஆணையிட்டது. சிபிசிஐடி இந்த வழக்கில் விசாரணையை மேற்கொண்ட நிலையில்கூட கடந்த இரண்டு ஆண்டுகளாகக் குற்றவாளிகளை அடையாளம் காண்பதில் மெத்தனமாகவே இருந்தது. உயர் நீதிமன்றம் ஒவ்வொரு முறையும் இதில் கடுமையாக அறிவுறுத்திய பிறகும்கூட குற்றவாளிகள் யார் எனக் காவல்துறை கூறவில்லை. தற்போது இது தொடர்பாக சிபிஐ விசாரணை கேட்ட வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் , சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுவிடுமோ என்ற அய்யத்தில், அதைத் தடுப்பதற்காகவே இந்தக் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாகக் கருத வேண்டியுள்ளது. உண்மையான குற்றவாளிகளைக் காப்பாற்றும் நோக்கோடு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது.
எனவே, இந்த வழக்கை விசாரித்து வரும் விசாரணை நீதிமன்றம் சி பி சி ஐ டி தாக்கல் செய்திருக்கும் குற்றப்பத்திரிக்கையை ஏற்கக் கூடாது என வலியுறுத்துகிறோம். அத்துடன், தமிழ்நாடு அரசே முன்வந்து இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.