ஈரோடு கிழக்கு தொகுதியில் பதிவான வாக்குகள் எவ்வளவு என்பது குறித்த விவரத்தை தேர்தல் ஆணையம் வெளியிடாமல் இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி கூறியுள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நேற்று (பிப்.5) மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது முதல் 2 மணி நேரத்துக்கு ஒருமுறை பதிவான வாக்குகள் விபரம், தேர்தல் ஆணைய செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டு பத்திரிகையாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. மாலை 5 மணி அளவில் 64.02 சதவீத வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டது. அதன்பிறகு ஒரு மணி நேரம் மட்டுமே வாக்குப்பதிவு நடந்த நிலையில், மொத்தம் எத்தனை சதவீத வாக்குகள் பதிவானது என்ற விவரம் இரவு 11 மணிக்குத்தான் தெரிவிக்கப்பட்டது. அதுவும் தோராயமாக 67.97 சதவீத வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டது. அதன்பின், இன்று வியாழக்கிழமை காலை முதல் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை, இறுதியான வாக்குப்பதிவு சதவீதம் போன்ற எந்த தகவலும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலராலோ, செய்தி மக்கள் தொடர்பு அலுவலராலோ வெளியிடப்படவில்லை.
இந்நிலையில், தேர்தல் ஆணையத்தின் இந்த செயல்பாடு சந்தேகத்தை ஏற்படுத்துவதாக ஈரோடு கிழக்கு நாதக வேட்பாளர் சீதாலட்சுமி கூறியுள்ளார். இதுகுறித்து ஈரோடு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜ கோபால் சுன்கராவுக்கு அவர் அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-
ஈரோடு கிழக்கு தொகுதி வாக்குப்பதிவு நேற்று (பிப்.5) மாலை 6 மணிக்கு நிறைவடைந்த நிலையில் பதிவான வாக்குகள் சதவீதம் நேற்று புதன்கிழமை இரவு 11 மணி அளவில் தோராயமாக 67.97 சதவீதம் என தெரிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தேர்தல் நாளன்று பதிவான மொத்த வாக்குகள், ஆண் வாக்காளர், பெண் வாக்காளர், மூன்றாம் பாலினத்தவர் வாக்குகள் விபரம், தபால் ஓட்டுகள் விபரம் போன்ற எந்த புள்ளிவிவர தகவலும் இதுவரை பத்திரிகையாளர்களுக்கு தெரிவிக்கப்படவில்லை.
கடந்த காலங்களில் இது போன்ற தகவல்கள் உடனுக்குடன் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட தேர்தல் அலுவலரிடமும், செய்தி மக்கள் தொடர்பு அலுவலரிடமும் பத்திரிகையாளர்கள் பலமுறை கேட்டும் பதிவான வாக்குகள் குறித்த விபரம் வெளிப்படையாக தெரிவிக்கப்படாதது மர்மமாக உள்ளது. ஏற்கனவே, ஆள்மாறாட்டம், கள்ள வாக்குகள் பதிவானது குறித்த பல்வேறு புகார்கள், வாக்குப்பதிவின் போது வந்த நிலையில், அதன் மீதும் தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில், தற்போது பதிவான வாக்குகள் விபரத்தை கூட பத்திரிகையாளர்களிடம் தெரிவிக்காமல் மறைப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. எனவே, தேர்தல் ஆணையம் வெளிப்படைத்தன்மையுடன் இயங்குகிறதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனைப் போக்கும் வகையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் பதிவான வாக்குகள் குறித்த முழு விபரத்தையும் பத்திரிக்கை மற்றும் ஊடகத்தினருக்கு உடனடியாகத் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.