திருப்பரங்குன்றம் விவகாரம்: தடையை மீறிய இந்து அமைப்பினர் 900 பேர் மீது வழக்கு!

திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டம், கோஷமிட்ட சுமார் 900க்கும் மேற்பட்ட இந்து முன்னணி, இந்து அமைப்பினர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக நேற்று முன்தினம் இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்புகள் திருப்பரங்குன்றம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டனர். இதற்கு காவல்துறை அனுமதி மறுத்த நிலையில் மாவட்ட நிர்வாகமும் விதித்த 144 தடை உத்தரவால் போராட்டம் தடுக்கப்பட்டது.

இருப்பினும், தடையை மீறி திருப்பரங்குன்றம் முருகன் கோயில் அன்னதான மண்டபம்,முருகன் கோயில் நுழைவு பகுதி, வெயில் உகந்தம்மன் கோயில் பகுதியில் பக்தர்கள் போர்வையில் சென்ற இந்து முன்னணி மற்றும் இந்து அமைப்பினர் திடீரென கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். இவர்களை போலீஸார் கைது செய்தனர். இது தொடர்பாக 390 க்கும் மேற்பட்டோர் மீது 6 பிரிவுகளின் கீழ் திருப்பரங்குன்றம் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

இது போன்று மதுரை நகரில் 16 வழக்குகளும், மாவட்டத்தில் 26 வழக்குகள் மூலம் சுமார் 500க்கும் மேற்பட்ட இந்து முன்னணியினர் உள்ளிட்ட இந்து அமைப்பினர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்