சூயஸ் நிறுவனம் யார் சொன்னாலும் கேட்பதில்லை: கோவை திமுக எம்.பி.!

கோவை மாநகராட்சியில் தண்ணீர் விநியோகிக்கும் சூயஸ் நிறுவனத்தை அதிகாரிகள் யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. அவ்வளவு பவர் வாய்ந்தவர்களா சூயஸ் நிறுவனத்தினர் என்று கோவை மாநகராட்சி கூட்டத்தில் எம்.பி. ராஜ்குமார் மாமன்ற கூட்டத்தில் கேள்வி எழுப்பினார்.

கோவை மாநகராட்சி சாதாரணக் கூட்டம் மேயர் ரங்கநாயகி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கோவை மக்களவை உறுப்பினர் ராஜ்குமார் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

கோவை மாநகராட்சிப் பகுதியில் சாலையோர கடைகளை ஒழுங்குபடுத்த வேண்டும். சாலையோர ஆக்கிரமிப்பு ஆபத்தானதாக மாறிக் கொண்டே இருக்கிறது. சக்தியமங்கலம் சாலை, காந்தி மாநகர் ஆகிய இடங்களில் சாலையோர கடைகள் அதிக அளவில் முளைத்திருக்கிறது. குடிநீர் விநியோகத்திற்கு தேவையான அதிகாரிகள் நம்மிடம் இருக்கிறார்கள். ஆதி காலத்தில் இருந்து தண்ணீர் விநியோகம் செய்து கொண்டு இருக்கின்றோம். சூயஸ் வந்ததில் பெரிதாக விருப்பமில்லை. ஆனால் சூயஸ் திட்டம் வந்து விட்டது. அவர்களை முறைப்படுத்த வேண்டும். அந்த நிறுவனத்தை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. நகரில் பல இடங்களில் குழிகளை தோண்டி மாச கணக்கில் போட்டு வைக்கின்றனர். அதிகாரிகள் யார் சொன்னாலும் அவர்கள் கேட்பதில்லை. அவ்வளவு பவர் வாய்ந்ததா? சூயஸ் நிறுவனம் என கேள்வி எழுப்பினார்.

சூயஸ் நிறுவனத்தை நிறுத்த வேண்டும். இப்படியே போய்க் கொண்டிருந்தால் தேர்தல் நேரத்திற்குள் சாலைப் பணிகளை முடிக்க முடியாது. அடிக்கடி சாலைகளை தோண்டினால் மக்கள் தாங்க மாட்டார்கள். தேர்தலை சந்திக்க வேண்டும். சாலைகளை தோண்டுவதை நிறுத்தாவிட்டால் பணி நடக்கும் இடங்களை தடுத்து நிறுத்துவது நானாகக்தான் இருக்கும். எதிர்க்கட்சி மாதிரி பேசி விட்டேன் என நினைக்க வேண்டாம், மாமன்ற உறுப்பினர்கள் பேச முடியாத சூழலில் தான் நான் பேசுகின்றேன். சூயஸ் விவகாரம் குறித்து மேயர், ஆணையர், மக்களவை உறுப்பினர், மண்டலத் தலைவர்கள் அமர்ந்து சிறப்பு கூட்டம் போட்டு தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும் என்றார்.

இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மக்களவை உறுப்பினர் ராஜ்குமார் கூறியதாவது:-

சூயஸ் குழுவால் தோண்டப்பட்ட சாலைகள் மீண்டும் சீரமைக்கப்படுவது இல்லை. இதனால் மிகப்பெரிய தாமதம் ஏற்படுகிறது. இதைத் தான் இன்று நான் மாமன்றத்தில் சுட்டிக்காட்டினேன். கவுன்சிலர்கள், மண்டல தலைவர், மேயர் என யார் கூறினாலும் அவர்கள் கேட்பதில்லை. அந்த நிறுவனம் யாருக்கு தான் கட்டுப்படும் என்பது பெரிய கேள்விக்குறியாக உள்ளது. நான் இத்தனை வேலைகளுக்கு இடையில் வந்து மாமன்ற கூட்டத்தில் பேசும் அளவுக்கு அந்த நிறுவனம் நடந்து கொள்கிறது. ஒரு சாலையை சீரமைத்ததற்கு பிறகு, ஒரே ஒரு இடத்தில் இருந்து தோண்டி வேலையை ஆரம்பிக்கலாம் என்று இல்லை, ஒருபுறம் தோண்டிக் கொண்டிருக்கிறார்கள், ஒருபுறம் சாலையை சீரமைப்பது இல்லை, இதனால் மக்கள் செல்லும் இடம் எல்லாம் பிரச்சனையாக உள்ளது. காலையில் மக்கள் ஒரு வேலைக்கு சென்று வருவதற்குள் படாதபாடுபடுகிறார்கள். இவை அனைத்திற்கும் காரணம் இந்த சூயஸ் நிறுவனம்தான். குறிப்பிட்ட காலத்திற்குள் அவர்கள் சீரமைப்பு பணிகளை செய்யவில்லை என்றால், அமைச்சரிடமும், பொறுப்பு அமைச்சரிடமும், அதன் பின்பு முதல்வரிடமும் இதைப் பற்றி எடுத்து செல்வோம்.

அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாக பேசியது குறித்த கேள்விக்கு, நான் லஞ்சம் வாங்கினார்கள் என்று கூறவில்லை. சரியான முறையில் அளவீடுகள் செய்யவில்லை. விடுபட்ட வரி இனங்களுக்காக விடுபட்ட இடங்களை அளக்க வேண்டும். ஆனால் ஒரு கார் செட் இடத்திற்கெல்லாம் வரி விதிப்பது மக்களை அலைக்கழிக்கும் செயல். இப்படி செய்து மக்களை பயமுறுத்துகிறார்கள், அதனால் அதற்கெல்லாம் வரி போடக்கூடாது என்ற காரணத்திற்காக தான் கூறினேன்.

சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் குறித்த கேள்விக்கு, சாலையோர கடைகள் ஆக்கிரமிப்பு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது, இதை மாநகராட்சியும் கேட்டுக் கொள்வதில்லை காவல்துறையும் கேட்பது இல்லை. அவ்வளவு தரமற்ற பொருட்கள் விற்பனை செய்கிறார்கள். நான் பார்க்கும் பொழுதெல்லாம் தரம் இல்லாத உணவுகளை இளைஞர்கள் பெரியவர்கள் என அனைவரும் உண்கிறார்கள். இதனால் கோவையில் போக்குவரத்து நெரிசலும் அதிகமாக இருக்கிறது. பாதாள சாக்கடை திட்டப் பணியும், சூயஸ் கால்வாய் பணிகளைப் போன்றே பல இடங்களில் நிறைய பிரச்சனைகள் சென்று கொண்டிருக்கிறது. அதை கவுன்சிலர்கள் கண்டு கொள்வதே இல்லை என்ற கேள்விக்கு, இதைப் பற்றி ஒரு ரிவ்யூ மீட்டிங் போட சொல்லி மாநகராட்சி ஆணையாளரிடம் கூறியிருக்கிறேன், சூயஸ் மற்றும் இந்த பாதாள சாக்கடை குறித்து விரைவில் கூட்டம் போட்டு நல்ல முடிவு எட்டப்படும். பாலக்காடு சாலையை ஒருமுறை ஆய்வு செய்துவிட்டு அதை சீரமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுத்து வேலைகளை தொடங்குவோம்.

கம்யூனிஸ்ட் காங்கிரஸின் ஆர் ட்ரோன் சர்வே குறித்து ஆர்ப்பாட்டம் செய்வது குறித்து கேள்விக்கு, அவர்கள் கூறும் காரணம் சரியாகத்தான் இருக்கிறது. இதே காரணத்தைத்தான் இன்று நான் மாமன்ற கூட்டத்திலும் கூறினேன். இது சரி செய்யப்படக்கூடிய ஒன்றுதான் விரைவில் சரி செய்யப்படும். மக்களுக்கான பிரச்சனையை நீங்கள் கையில் எடுப்பது அதிகாரிகளுக்கான மிரட்டலா என்ற கேள்விக்கு, இது மிரட்டல் எல்லாம் இல்லை, நிர்வாகத்தை சீர் செய்ய வேண்டும் என்பதற்காக இதை செய்கிறேன். வரி வசூலில் பில் ஆட்சியர்கள் சரியாக செயல்படவில்லை என்றால் அவர்களுக்கு அடுத்து மாறுதல் தான் கிடைக்கும் என்றார். நாய்கள் கருத்தடை விவகாரத்தில், பண நோக்கில் செயல்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, NGO என்ற போர்வையில் பலவாறு செயல்படுகிறார்கள், அதை சரி செய்வதற்காக அடுத்த கூட்டத்தில் நிச்சயம் பேசுவேன். விரைவில் அதையும் சரி செய்து விடுவோம் என்றார்.