பெண்களுக்கு பாதுகாப்பில்லாததில், நாட்டிலேயே முதல் மாநிலமாக தமிழகம் விளங்குகிறது என கிருஷ்ணகிரியில் அதிமுக துணை பொது செயலாளர் கே.பி.முனுசாமி கூறினார்.
அரசு பள்ளி மாணவி வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து, கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அண்ணா சிலை எதிரே அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர்கள் கிழக்கு அசோக்குமார் எம்எல்ஏ, மேற்கு முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி ஆகியோர் தலைமை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் அதிமுக துணை பொது செயலாளர் கே.பி.முனுசாமி எம்எல்ஏ கண்டன உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
திமுக ஆட்சி பொறுப்பேற்று 4 ஆண்டுகளில் அவர்களது திறமையின்மையால் பல்வேறு குற்றச் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. குறிப்பாக பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 5 மாதங்களுக்கு முன் போலி என்சிசி முகாம் என்கிற பெயரில் பல பள்ளி மாணவிகள் பாலியல் சீண்டல்களுக்கு ஆளாக்கப்பட்டனர். தற்போது மீண்டும் ஒரு பள்ளி மாணவி பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்திற்கு பிறகு ஒரு பள்ளியில் ஆய்வுசெய்த கல்வித் துறை அமைச்சர், பாலியல் புகார்களில் கைது செய்யப்படும் ஆசிரியர்களின் கல்விச் சான்றிதழ்கள் பறிக்கப்படும் என பேசுகிறார். இதுபோன்ற குற்றத்தை தடுப்பதற்கு அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என அரசோ, அமைச்சர்களோ கூறவில்லை. தண்டனைகளை பற்றி பேசும் அவர்கள் குற்றங்களை தடுக்க என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்கள். மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள இந்த பள்ளிச் சிறுமிக்கு மாவட்ட நிர்வாகம் என்ன செய்துள்ளது?
அண்ணா பல்கலைகழக மாணவி விவகாரத்திலும், அரசு முறையான நடவடிக்கை எடுக்கவில்லை. மாணவிக்காக அதிமுக வழக்கறிஞர் வரலட்சுமி வழக்கு தொடர்ந்தார். தொடர்ந்து உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களின் வழக்குகளால், மாணவிக்கு ரூ.25 லட்சம் வழங்க வேண்டுமென நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதேபோல பள்ளி மாணவிக்கும் தொகை வழங்குவதோடு, அவரது உயர் கல்வி, அரசு சலுகைகள் அனைத்தையும் வழங்க வேண்டும். மகளிர் பள்ளியில் பக்குவப்பட்ட ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். வயது குறைந்த ஆசிரியர்களை பணியமர்த்த கூடாது. இதேபோல பள்ளியில் பயிலும் மாணவியரை, ஆசிரியர்கள் தங்கள் மகள்களாக பார்க்க வேண்டும்.
ஒரு பெண் ஏடிஜிபி தன்னை கொலை செய்ய முயல்கின்றனர் எனக் கூறியும் நடவடிக்கை எடுக்க முடியாத அரசாக தமிழகம் விளங்குகிறது. தமிழகம் முதன்மை மாநிலம் என முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். பெண்களுக்கு பாதுகாப்பில்லாததில், நாட்டிலேயே முதல் மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் கே.பி.முனுசாமி கூறியதாவது:-
தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் தடையின்றி கிடைப்பதால், அதனை உட்கொள்பவர்கள் தன்னிலை மறந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதற்கு முழு காரணம் ஆளும் திமுக அரசின் செயல்பாடு குறைவு தான். பள்ளிகள் எவ்வாறு நடைபெற வேண்டும் என்கிற வரைமுறைகள் உள்ளன. அரசு பள்ளிகளில், கல்வி அலுவலர்கள் அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும். ஆனால், தற்போது சிஇஓ உட்பட எந்த கல்வி அலுவலர்களும் ஆய்வுகள் மேற்கொள்வதில்லை. இதுபோல், பள்ளிகளில் உள்ள பெற்றோர் ஆசிரியர் கழகத்தில், திமுக ஆட்சியில் பள்ளிக்கு தொடர்பு இல்லாதவர்கள் நியமிக்கப்படுவதால், அவை செயல்படமாலும், பல்வேறு தவறுகளுக்கு உடந்தையாக இருக்கிறார்கள். எனவே, பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தில் நியமிக்க வேண்டும். அவர்களுடன், கல்வித்துறை அலுவலர்கள் இணைந்து செயல்பட வேண்டும்.
பள்ளி மாணவர்களுக்கு மனநல ஆலோசனைகள் வழங்குவது போல், ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும். இதனை பள்ளியின் தலைமையாசிரியர் உட்பட கல்வி அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும். தற்போது பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உரிய பாதுகாப்பும், உயர் கல்வி பயிலும் வரை அனைத்து செலவுகளையும் அரசே ஏற்க வேண்டும். ரூ.50 லட்சம் சிறுமியின் வங்கி கணக்கில் வைப்பு தொகையாக அரசு செலுத்த வேண்டும்.
அரசு பள்ளிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். அரசை சார்ந்து இல்லாமல், பொதுவாழ்வில் இருப்பவர்களும் அந்தந்த பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு மரண தண்டனை வழங்கினாலும், குற்றம் செய்ய வேண்டும் என்கிற எண்ணம் உள்ளவர்கள் தானாக மாறாவிட்டால் எதுவும் செய்ய முடியாது. ஆகவே அவர்களின் மனதை மாற்ற தேவையான நடவடிக்கையில் அரசு ஈடுபட வேண்டும். திமுக அரசு, மத்திய அரசுடன் குடுமிபிடி சண்டையில் ஈடுபட்டு மக்களை ஏமாற்றி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.