பழங்குடியின இளைஞர்களுடன் நடனமாடிய கவர்னர் ஆர்.என். ரவி!

ஜார்கண்ட், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் உள்ள 240 பழங்குடி இளைஞர்கள் தமிழகம் வந்துள்ளனர். பழங்குடியின இளைஞர்களுடன் நடனமாடினார் கவர்னர் ஆர்.என். ரவி.

‘மை பாரத்’ – நேரு யுவ கேந்திரா சங்கதன் ஏற்பாடு செய்த 16-வது பழங்குடி இளைஞர் பரிமாற்ற நிகழ்ச்சி சென்னையில் நேற்று தொடங்கியது. மத்திய அரசின் உள்துறை அமைச்சகம், இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம் சார்பில் பழங்குடியின இளைஞர்களை வேறு மாநிலங்களுக்கு அழைத்து சென்று, அந்த மாநில கலாசாரங்களை கற்பிக்கும் வகையில் இந்த பழங்குடி இளைஞர் பறிமாற்ற நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அந்த வகையில் ஜார்கண்ட், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் உள்ள 240 பழங்குடி இளைஞர்கள் தமிழகம் வந்துள்ளனர். நேற்று கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை வந்த அவர்களை கவர்னர் ஆர்.என்.ரவி வரவேற்றார்.

அவர்களுக்கு தமிழகத்தின் பெருமைகள், கலாசாரங்கள், பாரம்பரியங்கள் குறித்து கற்பிக்கப்பட்டது. அதோடு தமிழ் மொழியின் பெருமைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. விழாவில் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. அப்போது கவர்னர் ஆர்.என். ரவி, அவர்களுடன் சேர்ந்து நடனமாடினார். தமிழகம் வந்துள்ள இவர்கள் சென்னை ஐ.ஐ.டி. உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு செல்கின்றனர்.

இந்த நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் பேசிய கவர்னர் ஆர்.என். ரவி, இளைஞர்கள் பெரிய கனவுகளைக் காணவும், நம்பிக்கையுடன் கடினமாக உழைக்கவும், இன்று கிடைக்கும் முன்னெப்போதுமில்லாத வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவும், வலுவான மற்றும் சுயசார்பு இந்தியாவை உருவாக்குவதில் தங்கள் தேசியப் பொறுப்புகளை மனதில் கொள்ளவும் அறிவுறுத்தினார்.